பெர்த், மார்ச் 6 – உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி மலேசிய நேரப்படி பகல் 2.15 மணியளவில் தொடங்குகிறது.
உலகக் கோப்பை தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் மூன்று போட்டிகளில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தியது.
அடுத்து 4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் இன்று சந்திக்கிறது. இந்த போட்டி உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் நடைபெறுகிறது. உலக கோப்பையில் இதுவரை ஏழு போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன.
இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக 1983-ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.
இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இதுவரை மூன்று சதம் அடித்துள்ளார். மேலும் ஆயிரத்து 110 ரன்களை குவித்து அதிகபட்சமாக 127 ரன்களை எடுத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா ஒன்பது அரைசதங்களுடன், 823 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோன்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 4 சதங்களுடன் ஆயிரத்து 220 ரன்களும் குவித்துள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிராக அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்துள்ளார்.
மார்லன் சாமுவேல் மூன்று சதங்களுடன், ஆயிரத்து 140 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்துள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணியும் இந்திய அணிக்கு நிகரானதாகவே கருதப்படுகிறது.