புதுடெல்லி, மார்ச் 7 – சாம்சுங் நிறுவனம் இந்தியப் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்துடன் இணைந்து முக்கிய நகரம் ஒன்றில் மூன்றாவது தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக சாம்சுங்கின் முக்கிய நிர்வாகிகள் உத்திரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்துள்ள சாம்சுங்கின் செய்தித்தொடர்பாளர், இது குறித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னணி நிறுவனம் என்ற முறையில், இந்திய சந்தைகளில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இந்தியாவில் பெருகி வரும் தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.
எனினும் அவர் தொழிற்சாலை அமைப்பதற்கான முதலீடுகள் குறித்தும், பிற வர்த்தகம் குறித்தும் எத்தகைய தகவல்களையும் அளிக்கவில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தில் சாம்சுங் இணைவது குறித்து இந்திய வட்டாரங்கள் கூறுகையில்,
“சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அதற்கான இட வசதிகளை பெற உத்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் முயற்சி செய்து வருகின்றது”.
“இதில் உத்திரபிரதேசத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளன. இந்தியாவில் சாம்சுங் நிறுவனத்திற்கு ஏற்கனவே 2 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மற்றும் நொய்டாவில் உள்ளன.
சமீபத்தில் நொய்டா தொழிற்சாலையை மேலும் மேம்படுத்த 517 கோடியை சாம்சுங் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உருவாக இருக்கும் புதிய தொழிற்சாலை ஏறக்குறைய 1 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.