கோலாலம்பூர், மார்ச் 8 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய பேரணியில் நூருல் இசா
அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில், காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அந்தப் பேரணியில் கலந்துகொண்ட நூருல் இசா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அளவு பெரும் கூட்டமாக மக்கள் திரண்டிருப்பது தன்னை திக்குமுக்காட வைத்திருப்பதாகக் கூறினார்.
“எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. மலேசியர் என்ற வகையில் பெருமைப்படுகிறேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டிருப்பதைக் கண்டும் பெருமை அடைகிறேன். இது அன்வார் என்பவருக்காக நடத்தப்படும் பேரணி மட்டுமல்ல, மக்களின் அதிருப்தியையும் பிரதமர் நஜிப்பின் ஆட்சியால் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இது குறிக்கிறது. பொருட் சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி.), 1MDB எனப் பல விவகாரங்கள் மக்களை வீதிக்கு வரவழைத்துள்ளன,” என்று நூருல் இசா மேலும் தெரிவித்தார்.
நேற்றைய பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் புதுமையான முறையில் தனது முகத்தில் அன்வார் முகம் கொண்ட தாளைப் பதித்து தரும் தோற்றம்.
படங்கள் :EPA