கோலாலம்பூர், மார்ச் 8 – நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற அன்வார் இப்ராகிம் ஆதரவுப் பேரணி கோலாலம்பூரையே ஒரு கலக்குக் கலக்கியது.
தலைநகரின் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலுள்ள சோகோ (Sogo) பேரங்காடி வளாகம், இரட்டைக் கோபுரம் என பல முக்கிய இடங்களில் ஏறத்தாழ 10,000 பேர் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணியின் வித்தியாச முகங்களைக் காட்டும் படக் காட்சிகளின் தொகுப்பு:-
பேரணியில் அன்வாரின் மூத்த மகள் நூருல் இசா
பாதுகாவலர்கள் புடைசூழ்ந்து நின்றாலும் அஞ்ச மாட்டேன் என்பதுபோல் “நாங்கள் போராடுவோம்” என்ற வாசகம் தாங்கிய பதாகை ஏந்தி துணிச்சலுடன் நிற்கும் இளம்பெண். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், சரித்திர நிகழ்வின் படக் காட்சியை தவற விட்டுவிடக் கூடாது என்ற ஆர்வத்தில் தனது செல்பேசியில் படம் பிடிக்கும் பாதுகாவலர்…
மாமன்னரை மறக்கமாட்டோம்! பேரணியில் பல இடங்களில் மலேசிய மாமன்னரின் உருவப் படங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்தி வரப்பட்டன. அன்வார் இப்ராகிம் தனது விடுதலையில் இறுதிக் கட்ட முயற்சியாக மாமன்னரிடம் கருணை மனு சமர்ப்பித்திருக்கின்றார். அந்தக் கருணை மனு மீதான முடிவை மாமன்னர் இன்னும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய அன்வார் ஆதரவுப் பேரணி, பிரதமர் நஜிப்புக்கு எதிரான பேரணியாகவும் பார்க்கப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய சைருல், 1எம்டிபியில் கோடிக்கணக்கான நஷ்டம் என்ற குற்றச்சாட்டு, இவற்றுக்கிடையில் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. தலைநகர் சோகோ வளாகத்தில் நஜிப் எதிர்ப்பு பதாகைகளோடு திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்…
முகத்தில் முகம் பார்க்கலாம் – அன்வாரின் முகம் தாங்கிய ஒட்டுத் தாளை தனது கன்னத்தில் ஒட்டிக் கொண்டு ஆதரவுப் பேரணியில் கலந்து கொண்ட ஆதரவாளர் ஒருவர்.
நஜிப் மற்றும் அவரது துணைவியாருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்
அன்வார் விடுதலைக்காக நடைபெறும் போராட்டம் ‘மார்ச் 2 விடுதலை’ என்ற தலைப்பில் உருவெடுத்துள்ளது. அன்வார் மார்ச் 2ஆம் தேதிதான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதால் இந்தப் பெயர். அத்தகைய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
அன்வார் இப்ராகிம் மாமன்னரிடம் கருணை மனு சமர்ப்பித்துவிட்டு காத்திருப்பதால், மாமன்னரின் படங்களைத் தாங்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்தனர்.
படங்கள் : EPA