கோலாலம்பூர், மார்ச் 9 – “போயிங் நிறுவனம் தனது விமானங்களில், விமானத் தகவல்களை நிலைப்படுத்தக் கூடிய கருவிகளையும், ஒலிப்பதிவு கருவிகளையும் மேம்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று புரியவில்லை. இதே தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்பில் உள்ள இராணுவ விமானங்களில் மேம்படுத்தும் பொழுது, பயணிகள் விமானங்களில் ஏன் மேம்படுத்தக் கூடாது?” – இது எம்எச் 370 பேரிடர் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் எழுப்பிய கேள்விகள்.
மகாதீர் கூறிய தொழில்நுட்பங்களை தற்போது செயல்படுத்த போயிங் நிறுவனம் முயன்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, மாஸ் விமானங்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை சிவில் விமான போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறையின் தலைவர் டத்துக் அசாருதீன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “போயிங் 777 விமானங்கள், தானியங்கியாகவே ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மாஸ் கட்டுபாட்டு அறைக்கு விமானம் குறித்த தகவல்களை அனுப்பிவிடும். ஏ330, ஏ380 மற்றும் 737-400 விமானங்களைப் பொருத்தவரை, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்கள் பெறப்படும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விமானங்களில் இருந்து தகவல்களைப் பெற ‘நிகழ் நேர கண்காணிப்பு அமைப்புகள்‘ (real-time tracking systems)-ஐ உருவாக்க, அப்துல் ரஹ்மான் தனது குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு ஆலோசனைகளின் பேரில் ஒரு சிறந்த கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உறுதி செய்யப்பட உள்ளன. அதன் பிறகு அவை 2016-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த கண்காணிப்பு திட்டத்தின் பெயர் ‘காக்பிட் பைலட் டேட்டா லிங்க் கம்மியுனிகேசன் சிஸ்டம்‘ (cockpit pilot data link communication). இவை ஏற்கனவே குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ப்ளூ விமானங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாஸ் விமானங்களில் இந்த நடைமுறை மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியதுபோல், ஒருவேளை, இந்த தொழில்நுட்பங்களை போயிங் முன்னரே தங்கள் விமானங்களில் மேம்படுத்தி இருந்தால், எம்எச் 370-க்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.