Home அவசியம் படிக்க வேண்டியவை முரசு 30ஆம் விழா: “தமிழ் சோறு போட்டது! முரசு ஊதிய உயர்வு தந்தது!” – தமிழகப்...

முரசு 30ஆம் விழா: “தமிழ் சோறு போட்டது! முரசு ஊதிய உயர்வு தந்தது!” – தமிழகப் பத்திரிக்கையாளர் சதீஷ் பார்த்திபன்

1081
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 8 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து பிரபல தமிழகப் பத்திரிக்கையாளர் சதீஷ் பார்த்திபன் (படம்) முரசு அஞ்சல் மென்பொருள் பயன்பாடு குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள சிறப்புக் கட்டுரை இது) SATHISH Photo

பண்டைக் காலத்தில் தமிழனின் அடையாளங்களில் ஒன்று முரசு. இன்று அதில் மாற்றம், முன்னேற்றம்.

‘முரசு’ செயலியும் அழகுத் தமிழின், உலகத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக மிளிர்கிறது.

#TamilSchoolmychoice

பொதுவாக புகழ்ச்சிக்காக ஏங்குபவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. அத்தகையவர்களுடன் நான் பழகுவதும் இல்லை. சாமானியனான நான் இப்படிக் குறிப்பிடுவதால் உலகம் ஒன்றும் அதிர்ந்துவிடவோ, அழிந்துவிடவோ போவதில்லை.

ஆனால் வாழ்க்கையின் ஓட்டத்தில் எனக்கு ஓர் உண்மை பிடிபட்டுவிட்டது. அது, சாதனையாளர்கள் புகழ்ச்சிக்கு ஏங்குவதில்லை. இத்தகைய குணாதிசயமுள்ள வெகு சிலரை மட்டுமே என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். அவர்களில் ‘முரசு’ முத்துவும் ஒருவர்.

முரசு செயலியின் அருமை பெருமைகள், தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்ததுதான். கடந்த சில தினங்களில் செல்லியல் இணையதளத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் கைவண்ணத்தில் வெளியான அனைத்து கட்டுரைகளையும் படித்து முடித்த பிறகு என் மனதிலும், முரசு செயலியுடன் தொடர்புடைய எனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது கடமை எனத் தோன்றியது.

காரணம், அனைத்துப் பிரமுகர்களுமே இச்செயலியால் தமிழ் உலகம் அடைந்த, அடையப் போகின்ற நன்மைகளை விவரித்திருந்தனர்.

முரசுவால் ஊதிய உயர்வு

அது 1997ஆம் ஆண்டு. நயனம் வாரப் பத்திரிகையின் சென்னை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன். அதற்கு முந்தைய 5 ஆண்டு காலம் பகுதி நேர ஊழியனாக கணினி தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தேன். ஆனால் அச்சமயம் கணினியை அதிகம் இயக்கியது இல்லை.

நயனத்தில் பணியில் சேர்ந்தபோது, எனது ஊதியம் 2500 ரூபாய். அச்சமயம் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த எனக்கு அது மிகப் பெரும் தொகை.

எழுத்துப் பணியில் ஓரளவே அனுபவம் பெற்றிருந்ததால் அடுத்தடுத்து ஊதிய உயர்வு பெற்று ரூ.5 ஆயிரம் ஊதியத்தைப் பெற பல ஆண்டுகள் ஆகும் என நினைத்திருந்தேன். இதனால் வேலை கிடைத்த மகிழ்ச்சியை விட 5 ஆயிரத்தை எப்போது எட்டிப்பிடிப்போம் எனும் கவலையே மனதை ஆக்கிரமித்திருந்தது.

Murasu AnjalLogoபணியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே நயனம் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன், சென்னையில் இருந்த என்னை மலேசியாவில் இருந்து தொடர்பு கொண்டார். அவர் எழுத்துப் பணியை தவிர்த்து என்னிடம் முதன்முறையாக வேறொரு விஷயம் குறித்து பேசினார்.

“நம் அலுவலகத்தில் ‘முரசு’ தமிழ்ச் செயலி இருக்கும். அதை ஒரு கணினியில் எப்படி புதிதாக பதிவிறக்கம் – இன்ஸ்டால் (INSTALL) செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதைப் பழகுங்கள்,” என்றார்.

இன்று கைபேசியில் பலவிதமான அப்ளிகேஷன்களை 5 வயது குழந்தை கூட நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்துவிடுகிறது. கணினித் துறை அந்தளவு மக்களை வசீகரித்துள்ளது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் கணினி குறித்து அதிகம் அறிந்திராத எனக்கு முரசு செயலியை பதிவிறக்கம் செய்வது என்பது இமய மலையை கயிறு கட்டி இழுப்பது போன்ற விஷயம்தான்.

ஆனாலும் சக ஊழியரிடம் அதற்கான வழிமுறையை கற்றுக்கொண்டு, நயனம் ஆசிரியர் சொன்னதைச் செய்தேன். மறுநாள் அவர் தொடர்பு கொண்டார். நான் விஷயத்தைச் சொன்னதும் அவர் கூறிய மறுமொழி எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்தது.

“உங்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு,” என்றார் ஆசிரியர்.

அடுத்த மாதம் வந்தது. வழக்கமான பணிகளுக்கு மத்தியில் மீண்டும் திடீரென தொலைபேசியில் அழைத்தார் ஆசிரியர். இந்த முறை புதிய பணியை ஒப்படைத்தார்.

“சென்னை அலுவலகத்தில் இருந்து தமிழில் மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும். இதுநாள் வரை கணினிக் கோப்புகளை மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள தொலைபேசி இணைப்பின் வழி பெற்று வந்தோம். இதனால் செலவுகள் அதிகரிக்கிறது. மின்னஞ்சல் என்றால் எந்தச் செலவும் இல்லை. அல்லது குறைந்தபட்ச செலவே ஆகும். அதை சாத்தியமாக்குங்கள். இதற்காக நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. முரசு செயலியில் அதற்கும் வழிவகுத்திருக்கிறார்கள்,” என்றார் நயனம் ஆசிரியர்.

முரசு செயலியை கணினியில் பதிவு செய்ததற்கே ஆயிரம் ரூபாய் வெகுமதி – ஊதிய உயர்வு. இப்போது அந்தச் செயலியுடன் தொடர்புடைய மற்றொரு பணி. கரும்பு தின்ன கூலி!

முரசுவின் ஆரம்பகால பதிகைகளோடு பழக்கம்

அப்போது எங்கள் அலுவலகத்தில் இருந்தது, என் நினைவறிந்து முரசு அஞ்சல் (1.8 BETA) என்று நினைக்கிறேன். அதில் எடிட்டர் (EDITOR), மின்னஞ்சல் (MAIL) என பல கூறுகள் இருக்கும். அவற்றுள் மின்னஞ்சல் பகுதியை தேர்வு செய்தால் தமிழிலேயே தட்டச்சு செய்து அனுப்ப முடியும். அதற்கு இணைய இணைப்பு தொடர்பான சில அடிப்படை விவரங்களை தெரிந்து வைத்திருந்தால் போதும்.

நயனம் ஆசிரியர் அறிவுறுத்திய பின்னர் இந்த அடிப்படை விவரங்களை சேகரித்துக் கொண்டு முரசு அஞ்சல் செயலியை இயக்கினேன்.

எனது ஆசிரியருக்கு நான் அனுப்பிய முதல் மின்னஞ்சலில் இருந்தது ஒரே வரிதான். அது, RESPECTED SIR.

மின்னஞ்சல் நள்ளிரவில் சென்றதால் மறுநாள் காலை தான் பதில் வந்தது.

அதன் சாராம்சம் இதுதான்: “அன்புள்ள சதீஷ், கடிதம் கிடைத்தது. நன்றி. தமிழர்கள், தமிழிலேயே பேசுவோமே. முயற்சி செய்யுங்கள். தட்டச்சு பழகுங்கள். முரசு இருக்கிறது.”

கூடவே தொலைபேசியில் அழைத்து இன்னொரு ஆச்சரியமான, இனிக்கும் தகவலையும் சொன்னார்.

“உங்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு!”

முரசுவால் மீண்டும் ஊதிய உயர்வு

பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில் முதல் ஊதிய உயர்வு. இரு மாதங்கள் முடிவதற்குள் அடுத்த ஊதிய உயர்வு. இந்நிலையில் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என அடுத்த உத்தரவு.

மீண்டும் கரும்பு தின்ன கூலி!

அன்று இரவே அலுவலக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று விடிய விடிய தமிழில் தட்டச்சு செய்ய பயின்றேன். ஓரிரு தினங்கள் தான், தமிழில் சரளமாக தட்டச்சு செய்ய முடிந்தது.

அதன் பின்னர் முரசு அஞ்சல் என் நண்பனாக மாறியது. அந்த நண்பனுடன் ஒவ்வொரு தினமும் நான் செலவிட்ட பொழுதுகள் மறக்க இயலாதவை. தினமும் அந்த நண்பனுடன் கணிசமான பொழுதைக் கழிக்காவிட்டால் வெறுமையை உணர்ந்தேன்.

தட்டச்சில் தேர்ச்சி பெற்ற விவரத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன். ‘முரசு நண்பன்’ எனக்கு வெகு விரைவிலேயே மேலும் ஒரு பரிசை அளித்தான். அது எனது ஆசிரியரின் மூன்றாவது தொலைபேசி அழைப்பு.

தொடர்பு கொண்டவர், வழக்கம்போல் சொன்னார்: “உங்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு!”

தமிழ் சோறு போடும் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. அது என் விஷயத்திலும் நிரூபணமானது. ஆனால் ஊதிய உயர்வுக்கு வழிவகுத்து கொடுத்தது – முரசு அஞ்சல்!

ஒரே கல்லில் 2 மாங்காய் அல்ல, 3 மாங்காய்களை அடித்த பாக்கியசாலி நான்!

ரு.5 ஆயிரம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என நினைத்திருந்த வேளையில், அந்த இலக்கை 3 மாதங்களில் எட்ட முரசு செயலி உதவியது.

உலகம் முழுக்க என்னுடன் சுற்றிய “முரசு நண்பன்”

1990களில் உலக பூமிப் பந்தில் இணைய இணைப்பு பெறுவதற்கே பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய ஒரு பகுதியில் வசித்த எனக்கு, இணையமும் முரசு தமிழ்ச் செயலியும் செய்த உதவி வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. அதற்கு திரு.முத்து முக்கியமான, முதன்மையான காரணகர்த்தா என்றால் அதில் மிகையில்லை.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் எனது நண்பன் – ‘முரசு அஞ்சல்’தான் – அது இன்றி நான் செல்வதில்லை. தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களுக்கு சென்றபோதும், உலகத்துடன் எனது தாய்மொழி வழி தொடர்பில் இருக்க வழிவகுத்த நண்பன் அவன்.

விடுமுறைக்காக குடும்பத்துடன் பலமுறை தாய்லாந்து சென்றிருக்கிறேன். அங்குள்ள நண்பர்கள் பேசும் ஆங்கிலம் அவ்வளவு சுலபத்தில் புரிபடாது. அவர்கள் தங்கள் தாய்மொழியில் பயன்படுத்தும் கணினியை உபயோகிப்பதோ அதைவிட சிரமமான விஷயம். எனக்கோ தினமும் எனது அலுவலகம் சார்ந்த செய்திப் பணிகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயம்.

சினிமா, தொலைக்காட்சி விளம்பரங்களில் வருவதுபோல், “இதோ இருக்கிறது முரசு அஞ்சல்!” என்று எனக்குள்ளே சொல்லிக் கொள்வேன்.

எனது மின்னஞ்சல் தொகுப்பில் சேமித்து வைத்துள்ள முரசு அஞ்சல் (1.8 BETA)வை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்வேன். அடுத்த நொடியே, தமிழில் தட்டச்சத்து செய்யத் தொடங்கி எனது பணியை செவ்வனே செய்து முடிப்பேன்.

இப்போது சொல்லுங்கள்! ‘முரசு’ என் நண்பன் மட்டுமா அல்லது, உலகத் தமிழர்களின் நண்பனா?

முரசுவால் இலங்கையில் மறக்க முடியாத அனுபவம்

2000இல் ஒருமுறை இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு தரை இறங்கினேன். சென்னை செல்லும் அடுத்த விமானம் காலை 8 மணிக்கு புறப்படும் என்றனர். இடையில் 5 மணி நேரம் இருந்தது.

அன்றைய இரவு பொழுதிற்குள் அனுப்ப வேண்டிய கட்டுரைகள் மனதில் நிழலாடின. கணினி கிடைத்தால் போதும். அடுத்த 2 மணி நேரத்தில் சில கட்டுரைகளை முடித்துவிடலாம் என மனதில் யோசனை ஓடியது.

நல்ல வேளையாக விமான நிலையத்தில் இருந்த இணைய மையத்தில், (BROWSING CENTRE) இடம் கிடைத்தது. கணினி கிடைத்த இரண்டாவது நிமிடமே முரசு அஞ்சல் (1.8 BETA) செயலியை பதிவிறக்கம் செய்து எனது பணியை தொடங்கிவிட்டேன். 30 நிமிடங்கள் கழிந்த பின்னர், அந்த இணைய மையத்தின் பொறுப்பாளர்களும் காவல்துறையினரும் என்னைச் சுற்றி நின்றிருந்தனர்.

எனக்கோ அதிர்ச்சி! “என்ன விஷயம்?” என்று கேட்டேன்.

“எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறீர்கள்? அதற்கான எந்த செயலியும் இங்கு இல்லையே!” என்று கேள்வி எழுப்பினர்.

நான், முரசு அஞ்சல் குறித்து விவரித்தேன். அதன் பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்து என்னிடம் கேட்டறிந்த அவர்கள் ஆச்சரியம் விலகாமல், குறையாமல் கலைந்து சென்றனர்.

அப்போது எனது நண்பன் முரசு அஞ்சலை நோக்கி மானசீகமாக சொன்னேன்: “நாம் தமிழர்கள்டா!”

முரசு என்ற இந்த இனிய நண்பருடன் கடந்த 18 ஆண்டுகளாகப் பழகி, பயணித்து வருகிறேன். வாழ்நாள் முழுவதும் இந்த நண்பர் என்னுடன் இருப்பார். இந்த நண்பரை எனக்கு அறிமுகப்படுத்திய நயனம் ஆசிரியருக்கும், உலகத் தமிழர்களுக்கெல்லாம் இப்படியொரு இனிய, சிறந்த நண்பரை உருவாக்கித் தந்த திரு.முத்து அவர்களுக்கும் என் நன்றி.

முரசு முத்து நெடுமாறன் – தமிழ் கூறும் நல்லுலகின் சொத்து!

– சதீஷ் பார்த்திபன்

(சதீஷ் பார்த்திபன் நீண்ட காலமாக மலேசிய, சிங்கப்பூர், இலங்கை பத்திரிக்கைகளின் இந்திய ஊடகப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவர். மலேசியாவின் ‘மக்கள் ஓசை’ நாளிதழின் இந்திய ஊடகப் பிரதிநிதியாக நீண்டகாலமாத் தொடர்ந்து பணியாற்றி வருபவர்)