Home நாடு நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

1329
0
SHARE
Ad

கோலாலம்பூர்- (இன்று வெள்ளிக்கிழமை காலமான -மலேசியப் பத்திரிக்கை உலகின் பிதாமகர் – என எப்போதும் அழைக்கப்பட்ட – எம்.துரைராஜ் பத்திரிக்கைத் துறையில் பல காலகட்டங்களைக் கடந்து வந்தவர். சுவையான, சுவாரசியமான அனுபவங்களைக் கொண்டவர். கடந்த மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து எம்.துரைராஜ் தனது கடந்த கால நினைவலைகளோடு வழங்கிய இந்த  சிறப்புக் கட்டுரை 5 மார்ச் 2015-ஆம் நாள் செல்லியலில் பதிவேற்றம் கண்டது. அமரர் துரைராஜ் அவர்களை நினைவுகூரும் வண்ணம் அவரது அந்தக் கட்டுரையை மீண்டும் பதிவேற்றம் செய்கிறோம்) 

“எனது சிங்கப்பூர் வாழ்க்கை,… 19-வது வயதில் சிங்கப்பூர் தமிழ் வார இதழில் (புதுயுகம்) தொடங்கியது. எனக்கு முதலில் தரப்பட்ட வேலைவாய்ப்பு அந்த இதழ் சொந்தமாகப் பெற்றிருந்த கையால் மேற்கொள்ளப்படுகின்ற அச்சுக்கோர்ப்பு பகுதியில், சிதறி விழும் தமிழ் எழுத்துருக்களின் (டைப்) உலோக (ஈய) வார்ப்புகளைப் பொறுக்கி, அந்த எழுத்தை அச்சுக்கோர்ப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு மரப்பலகைத் தட்டில் உருவாக்கப்பட்டிருந்த அதனதன் குழிகளில் போடவேண்டும்.

அச்சு கோர்ப்பவர், தமிழில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு குழியில் உள்ள எழுத்தை, தனக்கு தரப்படுகின்ற “கையெழுத்து” காப்பியைப் பார்த்து அனாயசமாக ஒவ்வொன்றாகப் பொறுக்கி தனது இடது கையில் இறுக்கப் பற்றியிருந்த சிறிய அச்சுக்கோர்ப்பு செப்புத் தகட்டில், அளவு நிர்ணயித்து ஒவ்வொன்றாக அதற்குள் இணைத்துச் சொருகிக் கொண்டிருந்ததை கண்டு பிரமித்தேன்.

#TamilSchoolmychoice

தனது அச்சுக்கோர்ப்பில் கையெழுத்துக் காப்பிக்கு அச்சு உரு கொடுத்தார் அந்த அச்சுக் கோர்ப்பாளர். அச்சில் பதிவாகும் எழுத்துரு, தலைகீழாக இருக்கும். கீழே சிதறும் டைப்புகளை (எழுத்துரு) சரியான குழியில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் தலை கிறுகிறுத்துவிடும்.

Composing Fonts
பழைய அச்சுக் கோர்ப்பு முறையில் ஈயத்தாலான எழுத்துருக்கள்

இப்படித்தான், இந்த தமிழ் அச்சுக்கோர்ப்பு சிங்கப்பூரிலும் மலாயாவிலும் (பின்னர் மலேசியாவிலும்) அறிமுகம் கண்டது. பூர்த்தியடைந்த அச்சுக்கோர்ப்பு மேட்டர் ஈயத்தட்டு ஒன்றின் மீது சிந்தாமல் சிதறாமல் நூல்கொண்டு இறுகக் கட்டப்பட்டு அதன் மீது அச்சு மை தடவப்பட்டு பிரதி (ஃபுரூப்) எடுக்கப்படும்.

வீட்டில் இருந்து அச்சுக்கோர்ப்பு வேலைக்குச் செல்பவர் தனது கைகளையும்  உடைகளையும் அழுக்காக்கிக் கொள்ளத் தயாராக்கிக் கொள்ளவேண்டும். “அழுக்கு படியற வேலை இழுக்கு அல்ல” என்பது அச்சுக்கோர்ப்புக் காலத்தில் கூறப்பட்ட பொன்மொழி.

அச்சு எழுத்து உலோகவார்ப்பு தமிழகத்தில் இருந்து முக்கியமாக சுதேசி டைப் ஃபவுண்டரில் இருந்து கட்டுக்கட்டாக தருவிக்கப்பட்டு அச்சு பொருத்தும் தட்டின் (கேஸ்-case) குழிகளில் நிரப்பப்படும்.

சிங்கப்பூர் வாழ்க்கையை அடுத்து, கோலாலம்பூரில் தமிழ் நேசனில் துணையாசிரியராக இணைந்தபோது அச்சுக்கோர்ப்பு பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் அச்சுக் கோர்ப்பை தங்களது திருக்கரங்களின் சுழற்சியில் மேற்கொண்டதைக் கண்டேன்.

ஆசிரியர் பகுதியினர் தரும் காப்பிகளை தினசரிக்கும் ஞாயிறு மலருக்கும் தங்கள் கையால் கம்போசிங் செய்துகொண்டிருந்தனர் அச்சுக் கோர்ப்பாளர்கள்.

Murasu AnjalLogoமுதல் நாள் செய்துமுடித்த பக்கங்கள் அடுக்கடுக்காக பிரித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தாக அச்சு பொறுக்குத் தட்டின் குழிகளில் சேர்க்க வேண்டும். சில எழுத்துக்கள் தவறான குழிகளில் சேர்க்கப்பட்டு அதை மின்னல் வேகத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் கோர்த்து விடுவதாலேயே அச்சுப்பிழைகள் ஏற்படக் காரணமாக இருந்தனர்.

அச்சுக்கோர்த்த மேட்டரை புரூஃப் எடுத்து பிழை திருத்துவோரிடம் சேர்க்கும் போது அவர்களின் கவனக்குறைவால் பிழைகளுடன் பத்திரிகைகளில் செய்திகள் இடம் பெறுவதுண்டு. அவ்வாறு பிழையாக அச்சுக் கோர்க்கப்பட்டு கவனமுடன் திருத்தப்படாமல் பத்திரிகையில் இடம்பெற்ற பல சம்பவங்கள் சர்வசாதாரணமாக நிகழ்வதுண்டு.

உதாரணமாக “எம்பெருமான்” என்பதற்கு பதிலாக “எமபெருமான்” என்றும் “வைத்தியர்” என்பது மாறி “பைத்தியர்” என்றும் “தருணம்” என்பது “மரணம்” என்றும் “நாட்டுமருந்து” என்பது “பாட்டுமருந்து” என்றும் “கல் எறிந்தனர்” என்பது “பல் எறிந்தனர்” என்றும்,

இன்னும் பல பல விநோதமான பெயர்களில் பிழைகள் அச்சேறிவிடுவதுண்டு.

ஒரு விளம்பரப் பக்கத்தில் “துக்க அறிவிப்பு” என்பது “தூக்க அறிவிப்பாக” இடம்பெறுவதுண்டு.

டைப் தயாரிப்பு நிறுவனம்  சில முக்கிய எழுத்துக்களில் எண்ணிக்கையை குறைத்து ஏற்றுமதி செய்வதால் தற்காலிகமாக வெறும் எழுத்தைத் திருப்பிப் போட்டு புரூஃப் எடுத்து அனுப்புவதும், அது கவனக்குறைவால் திருத்தப்படாது அச்சில் வெளிவருவதும், கை அச்சுக் கோர்ப்பு காலத்தில் சர்வசாதாரணம்.

அங்குலக் கணக்கில் அச்சுக்கோர்ப்பு அந்தக் காலத்தில் கணக்கிடப்படும்.

கை அச்சுக்கோர்ப்பாளர் தனது திறமையை முழுவீச்சில் பயன்படுத்தி இரண்டு மணிநேரத்தில் 60 அங்குல மேட்டரை அச்சுக்கோர்த்துக் கொடுப்பதும் உண்டு. வழக்கமாக ஒருமணி நேரத்தில் பத்து அங்குலம்  முதல் பதினைந்து அங்குலம் மட்டுமே அச்சுக்கோர்க்க முடியும்.

கை அச்சுக் கோர்ப்பாளர்களுக்கு இரண்டுவித பாதிப்புக்கள் வருவதுண்டு. நின்று கொண்டே அச்சுக் கோர்ப்பதால் அதிகமானவர்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதுண்டு. இடதுகையில் அச்சுக்கோர்ப்பு செப்புத்தகட்டை இறுகப் பற்றிக்கொண்டு நீண்டநேரம் வலது கையால் அச்செழுத்து டைப்புகளை பொறுக்கிப் பொறுக்கி இணைத்து அதை ஒரு தட்டில் கவனமுடன் இறுக்கமுடன் கட்டப்படுவதால் மன இறுக்கமும் (டென்சன்)  (டைப்புகள் உதிர்ந்து சிதறினால் இருமடங்கு வேலை) கைகளின் நரம்புகளில் ஏற்படுகிற தசை இறுக்கமும் ஏற்பட்டு கைவிரல்களை மடக்கி விரிக்கமுடியாத நிலை உருவாகலாம்.

எனது உறவினர் பையன் ஒருவன் தனது வாழ்க்கையை சிங்கப்பூரிலும், கோலாலம்பூரிலும் கைஅச்சுக்கோர்ப்பில் முப்பதாண்டுகள் கழித்து அப்பாதிப்பினால் தமிழகத்தில் எந்த சிகிச்சையிலும் பலன் காணாது  தற்போது வீட்டோடு இருக்கின்றான். தனது எழுபதாவது வயதிலும் தன்கையால் உணவை எடுத்து உண்பதில் அதிக சிரமத்தை அனுபவிக்கிறான். அவனது பத்துக் கைவிரல்களும் மடங்கிக்கொண்டு வேதனை கொடுக்கின்றது.

அச்சுகோர்த்த மேட்டர் மீது மை தடவி புரூஃப் எடுப்பதால் கைகள்  அழுக்காகி அதைச் சுத்தம் செய்ய சோப்புடன் மண்ணெண்ணெய் கலந்து அலம்ப வேண்டும்.  அன்றாடம் 15 முதல் 20 அச்சுக்கோர்ப்பாளர்களுக்கு மண்ணெண்ணெயும் சோப்பும் முழுமையாகக் கிடைப்பதில் பத்திரிக்கை நிர்வாகங்கள் கஞ்சத்தனம் காட்டியதுண்டு.

அதன் தாக்கத்தால் அச்சுக்கோர்ப்பாளரின் உடல் நலம், கிருமிகளின்  தாக்குதலால் பாதிப்புறுவதும் உண்டு. “அச்சு வேலை – நச்சு வேலை” என்று 50-களில் பத்திரிகை வெளியிடுபவர்களும் அச்சகம் நடத்துபவர்களும்   சபிக்கப்பட்டதுண்டு.

ஆனால் இன்றைய கணினி யுகம் அச்சு வேலையை மெச்சும் வேலையாக்கித் தந்துள்ளது. தமிழ் எழுத்து உருக்களுக்கு மை தடவி புரூஃப் எடுத்து கைகளில் அழுக்கேற்றி கொள்வதற்கும் விடுதலை கிடைத்திருக்கிறது.

கணினி யுக தமிழ் அச்சுக் கலைக்கு “முரசு அஞ்சல்” மூலம் புத்துயிர் கொடுத்ததில் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மகத்தானது.

இனி ‘அகர முதல எழுத்தெல்லாம் கணினி முதற்றே உலகு’ என்ற புதிய குரலுடன், புதிய குறளுடன் புறப்படுவோம்.”

-எம்.துரைராஜ்