Home தொழில் நுட்பம் “முரசு அஞ்சல் எழுத்துகள் என்னைக் கொண்டு சென்ற தூரம் நெடியது” – கோ.புண்ணியவான்

“முரசு அஞ்சல் எழுத்துகள் என்னைக் கொண்டு சென்ற தூரம் நெடியது” – கோ.புண்ணியவான்

1237
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (அண்மையில் நடந்து முடிந்த ‘இணைமதியம்’ என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நமது நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் (படம்), முரசு அஞ்சலுடனான தனது தொடர்புகளை இங்கே சுவாரசியமாக விவரிக்கின்றார்)

Punniavanஎனக்கு கணினி கைவைரப் பெறாத 2000 ஆண்டு துவக்கத்தில் முரசு அஞ்சல் தமிழ் எழுத்துரு எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் இரண்டிரண்டு மென் பொருட்கள் இலவசமாகவே கொடுக்கப்பட்டன.

இரண்டாயிரத்தாம் ஆண்டில் வேறு தமிழ் எழுத்துருக்கள் இருக்கத்தான் செய்தன. கணினி பயன்பாடு மீது அக்கறையற்ற என் போன்றோருக்குத் தமிழ் எழுத்துரு இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன? நான் கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

தலைமை ஆசிரியர் என்ற முறையில் எனக்குப் பள்ளியில் நிர்வாக வேலைகள் அதிகம் இருந்தன என்பதுவும் ஒரு காரணம். என் அலுவலகப் பணியாளர்கள் கணினி வேலைகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதாலும் இந்த அக்கறையின்மைக்குக் காரணம்.

இலவசமாக வழங்கப்பட்ட தமிழ் மென்பொருளைக் கணினி பொறுப்பாசிரியரிடம் ஒப்படைத்து விட்டு, பின்னர் மறந்தும் விட்டேன். வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்தி வந்த அவர் “இந்த எழுத்துரு பயன்படுத்த எளிமையாக இருக்கிறது சார்”, என்று ஒருமுறை சொன்னார். அப்போதும் நான் அதனை கவனப்படுத்தவில்லை.

கைகளாலேயே எழுதி வந்த காலம்

Murasu Anjal-New-Logo-என் புனைவெழுத்துகளைக் கைகளாலேயே எழுதிவந்தேன் பல காலம். மூளையிலிருந்து விரல் வழியாக வழியும் புனைவு உயிர்ப்படைகிறது என்றே நினைத்தேன். இப்படி உருவாகும் எழுத்தின் ஆத்மாவை இயந்திரம் பழுது செய்துவிடும் என்றும் நினைத்தேன். அதுவே கையில் எழுதுவது எனக்கு தோதாக இருந்தது-பழகிவிட்ட ஒன்றிலிருந்து எளிதில்  மாறிவிட மாட்டோம். இது பெரும்பாலான மனித சுபாவம். சிகிரெட் புகைத்தல் , காப்பி குடித்தல் போல.

டாக்டர் ரெ. கார்த்திகேசு, “ இன்னும் கையில்தான் எழுதுறீங்களா? கணினியைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்க புண்ணியவான்,” என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிவந்தார் . நான் அசைந்தபாடில்லை . கையில் எழுதினாலும் அதே எழுத்துதான் என்று மனதுக்கு நானே ஆறுதல் சொல்லிவந்தேன். பேனாவும் பேப்பரும் சௌகரியமானது என்றே பலவந்தமாக எண்ணிவந்தேன். மாற்றம் என்பதை மனம் சிறிதும் ஏற்கவில்லை. கணினியைக் கற்றுக்கொள்வது கடுமையான மூளை செயல்பாடு என்று மனதளவில் முடிவெடுத்திருந்தது வேறு, வாழைக்கறையாகவே என்னுள் பதிந்துவிட்டிருந்தது.

அந்த நேரத்தில்தான், எனக்கென்று ஒரு கணினி, என் அலுவலகத்துக்கு வந்தது. எல்லா தலைமை ஆசிரியர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும், இனி எல்லா வேலைகளும் கணனி மூலமாகவே வரும், அதன் மூலமாகவே கோப்பு வேலைகள் அனுப்பப்படவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

கணினிப் பயிற்சி தொடங்கியது

அதனை முன்னிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு கணினி பயன்பாடு பயிற்சிப் பட்டறையும் நடத்தப்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு. தொடக்கத்தில் சிரமமாகத்தான் இருந்தது.

MURASU 30 years 600 x 600கணினியை எப்படித் “திறக்கவேண்டும்” – “மூடவேண்டும்” சுட்டு விரலில் அழுத்திக்காட்டி, அரிச்சுவடி பயிற்சியிலிருந்தே ஆரம்பித்தார்கள். தத்தி நடக்கும் தத்துப்பிள்ளை போல நடைபயில ஆரம்பித்தேன். பின்னர் மெதுவாக சில கற்பிதங்கள் பிடிக்குள் வந்தது. இவ்வளவு எளிமையா என்று மேலும் முன்னேறினேன்.

“சார் நீங்க எழுத்தாளரா இருக்கிறதுனால முரச அஞ்சல்ல அடிக்க கத்துக்கங்க சார்..கம்ப சூத்திரமெல்லாம் ஒன்னுமில்ல சார்,” என்று கணினி ஆசிரியர் சொன்னார். வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டேன். அவரே எனக்குத் துவக்கப் புள்ளியாக இருந்தார்.

நான் முதலில் என்ன எழுதினேன் தெரியுமா? ஒரு கவிதை.

அதைக் கணினியில் எழுத்துப் பூவாக மலர்ந்து, பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அந்தக் கவிதை உடனே அச்சில் ஏறிவிட்ட ஆனந்தம். கையெழுத்தில் எழுதினால் பத்திரிகையில் வர குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், கவிதை உடனே அச்சான பதிவைப் பார்க்கும்போது நிலைகொள்ளா ஆனந்தம். கவிதை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிட்ட  மன மகிழ்ச்சி.

எழுத்தைத் தேடித்தேடி அடிக்கவேண்டிய அவசியமே இல்லாமல்  ஆங்கில லிபி தமிழாய் மாறுவது ஒரு நடனம் மாதிரியே இருந்தது. என் விரல் நட்டுவனாராக எழுத்து நடனம் ஆடியது. வெள்ளைத்தாளில் பூக்கும் கருமை மலர்போல எழுத்துகள் மலர்ந்தபடியே இருந்தன. அவை வாசமும் வீசுவது போன்ற பிரம்மை.

பின்னர் கதை, கட்டுரை,  நாவல் எழுத கணினியையே பயன்படுத்த ஆரம்பித்தேன். அது கையில் எழுதுவதை விட மன்மடங்கு எளிதாக இருந்தது.

நான் 1999ல் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ நிஜம்’ என்ற நூலைக் கொண்டுவர எண்ணி ஆயத்த வேலைகளில் ஈடுபட்டேன். பத்திரிகையில் வந்தது  போக கையில் சில கதைகள் மீண்டும் எழுதி தமிழகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு முறை பிழை திருத்தத்துக்கு தபாலில்தான் வரும் .தபாலில்தான் திரும்பப்போகும். கடுமையான வேலையாக இருந்தது. தபாலுக்குக் காத்திருந்து, பிழை திருத்தி, அதனை அவர்கள் புரிந்து, மீண்டும் தொடர்பு கொண்டு,திருத்தி என கடுப்பான ஒரு மனநிலையை கொடுத்த வண்னம் இருந்தது.

சரி இந்த நூலோடு இனி நூலாக்கும் வேலையே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். அந்த முதல் நூல் அச்சாகி கையில் ஒரு குழந்தையைப் போலப் கையில் ஏந்திப் பார்க்க நேர்ந்தது பிரசவ வலிககு ஒப்பானது. அது எடுத்துக்கொண்ட காலமும் 10 மாதங்களுக்கு மேல்.

ஆனால் முரசு அஞ்சல் விரல் வழி வடிந்த எழுத்தின் எளிமையும் பலமும் என் முடிவை மாற்றிக்கொள்ளச் செய்தது.

ஒரு சிறுகதை ருதுவாகும் காலநேரம் இன்னதென்று  சொல்ல முடியாது. முதல் வாக்கியம் தோன்றிவிட்டால் அதை உடனே பதிவு செய்துகொள்ளவேண்டும். தாமதித்தால் அந்த வரி வந்த வழியாகவே காணமற் போய்விடும். இப்படி எத்தனையோ சிறுகதைகளை இழந்துவிட்டேன்.

ஏட்டில் எழுதி பதிவு செய்துகொள்ளலாம்- ஆனால் அது என் பொறுப்பின்மை காரணமாக கைதவறிப் போனதுண்டு. எனக்கு முதல் வாக்கியம் என் மூளையைத் தட்டும்போதெல்லாம் உடனே கணினியைத் திறந்து பதிவு செய்து கோப்பில் சேமித்து வைத்துக்கொள்வேன். பின்னர் அந்த வரி என்னைத் தூங்க விடாது. அதன் உருவாக்கத்துக்காக என்னை உசுப்பிய படியே இருக்கும். முதல் வாக்கியம் பதிவாகிவிட்டது. இனி பயமில்லை. ஒரு சிறுகதையை எழுதி முடித்து விட்டது போலத்தான் என்ற நம்பிக்கையை எனக்கு உவந்தளித்தது முரசு அஞ்சல்தான்.

அச் சிறுகதை ஒவ்வொரு எழுத்தாய் வடிவம்பெற்று முடிவுறும் நேரம் பெருமகிழ்ச்சியான தருணம். அது பத்திரமாக இருக்கிறது. மேலும் மேலும் மெருகேற்றுவதற்கு வசதியாக இருக்கிறது. எனவே என் சிறந்த இன்னொரு சிறுகதை தயாராகிக்கொண்டிருக்கிறது என்று என்னை எழுதத் தூண்டியது முரசு அஞ்சல்தான்.

நான் இன்றைக்கு இரண்டு நாவல்கள், (இன்னொன்றை பாதி முடித்துவிட்டேன்) நூற்றுக்கு மேற்பட்ட கதைகள், எண்ணற்ற கட்டுரைகள்,நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதி முடித்திருக்கிறேன் என்றால் அதற்கு அடிப்படைக் காரணியாக முரசு அஞ்சல் இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

நான் நிஜமாகச் சொல்கிறேன்.  என் ‘நிஜம்’ தொகுப்புக்குப் பிறகு நிஜமாகவே எழுத்துத் துறையை விட்டு காணாமற் போயிருப்பேன். இன்றைக்கு ‘சிறை’ ‘எதிர்வினைகள்’ சிறுகதை தொகுப்புகளும், ‘நொய்வப் பூக்கள்’ ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவல்களும், ஒரு கட்டுரை, ஒரு கவிதைத் தொகுப்பும் என் எழுத்துச் சொத்தாக பதிவாகி இருப்பதற்கு முரசு அஞ்சல்தான் என்பதை  என் நெஞ்சு நிறையச் சொல்லமுடியும். எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்துத் துறையில் எனக்கு ஒரு தனி அடையாளத்தை வழங்கியதற்குப் பெருந்துணையாக இருந்ததுவும் அதுவே.

ஏன் இந்தக் கட்டுரையைக் கூட, 14.3.15ல் திறப்பு விழா கண்ட முரசு அஞ்சல் புத்தம் புதிய எழுத்துருவில்தான் தட்டச்சு செய்தேன். நான் கேட்டவுடன் எனக்கும் இலவசமாக அனுப்பிவைத்த  செல்லியல் துணை ஆசிரியர் நண்பர் பீனிக்ஸ்தாசனுக்கும், எழுத்தை வடிவமைத்த முரசு குடும்பத்தாருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி.

நான் மட்டுமா நன்றி சொல்கிறேன்?

தமிழ்மொழி கணினி யுகத்தில் கால்கோள் கொண்டு சர்வதேசம் முழுதும் பயன்மதிப்பு பெறுகிறது என்றால் முரசு என்று சொல் முரசறைந்து ஒலித்துக் கொண்டிருப்பதுதான் காரணம்.

-கோ.புண்ணியவான்