(சமீபத்தில் மலேசியா எழுத்தாளர் கோ.புண்ணியவான் மாயமலைத் தீவு எனும் சிறுவர் கதைத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அது தொடர்பாக அவரோடு இளம் எழுத்தாளர் பிருதிவிராஜ் செல்லியலுக்காக எடுத்த ஒரு நேர்காணல் இது.)
பிருத்விராஜ்: நீங்கள் சமீபத்தில் மாயமலைத் தீவு என்று சிறுவர் கதைகள் அடங்கிய நூலைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இது சிறுவர்கள வாசிப்புக்காக நீங்கள் எழுதிய மூன்றாவது நூல். ஏன் தொடர்ந்து சிறுவர் வாசிப்பு மீதான கவனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
கோ.புண்ணியவான்: இளம் வயது தொட்டே வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதைத் தவிர வேறென்ன நோக்கம் இருந்துவிடமுடியும்? அவர்களின் கற்பனை வளம் வாசிப்பிலிருந்துதானே தொடங்க முடியும். இன்றைக்கு வளர்ந்துவிட்ட தொழில்நுட்பக் கருவிகள் பெரும்பாலும் கற்பனைத் திறனை அடிப்படையாகக் கொண்டதுதானே. கற்பனைத் திறனே நாளைய தொழில்நுட்பத் துறையை மென்மேலும் வலிமைகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதற்கு மாணவர்களை தயார் படுத்தும் வண்ணமாகவும் அந்தத் தொழிநுட்ப நீரோட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதால் சிறார் இலக்கியம் படைக்கிறேன்.
பிருத்விராஜ்: சிறுவர் இலக்கியம் படைப்பதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
கோ.பு: சிறுவர் என்ற துளிர் பருவத்தை எந்த வயதிலிருந்து எந்த வயதுக்குள் அடக்குவது என்பதே முதல் சவால். பாலர் பள்ளிக்கு நுழையும் நான்கைந்து வயது இளசுகளிலிருந்து பன்னிரண்டு வயது வரைக்குமானவர்களை சிறார்கள் என்று வகைப்படுத்தலாம். பதின்மூன்று வயது தொடங்கி அவர்கள் பதின்மபருவத்தை அடைந்துவிடுகிறார்கள். இங்கே என்ன சவால் என்றால் இதில் எந்த வயதினருக்கு எழுதவேண்டுமென்பதே. நான் கதை எழுதும்போது பத்து வயதுக்கும் மேற்பட்டவர்களை குறிவைத்தே எழுதுகிறேன்.அவர்களில் பெரும்பாலானோரால் வாசிக்க இயலும் என்பதால். ஐந்தாறு வயதடைந்தவர்களுக்கு படக்கதைகள் எழுதப்படவேண்டும். ஏழு வயதிலிருந்து ஒன்பது வயது எட்டியவர்களுக்கும் எளிமையான மொழியில் சித்திரங்களுடனான கதைகள் பயனளிக்கும். பக்கத்துக்குப் பக்கம் ஓவியங்களால் சித்திரிக்கப்பட்ட நூல் விலை மிகுந்தவையாக ஆகிவிடும். பெற்றோர் விலை கொடுத்து வாங்கச் சிரமப்படுவார்கள். எனவேதான் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கே கதை வடிக்கிறேன். ஒரு சிறுகதைக்கு ஒரு சித்திரம் என வடிவமைக்கப்படும்போது அதன் விலையும் குறைகிறது.
இரண்டாவது கதைப்பொருளை அந்தந்த வயதுக்கேற்றார்போல தேர்ந்தெடுப்பதுவும் சவால்தான்.
பிருத்விராஜ்: சிறுவர் கதைகளில் இறுதியில் நீதி சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நீங்கள் சொல்வதில்லையே ஏன்?
கோ.பு: கதைகளினூடாகவே நீதி சொல்வதையே சிறந்தது என நினைக்கிறேன். அவர்கள் ஒரு புனைவை வாசிக்கும்போது அது என்ன அறத்தை முன்வைக்கிறது என்று வாசிப்பினூடாகவே உள்வாங்கிக்கொள்ளும் வகையில் எழுதுவதே சிறந்த உத்தி.. இந்த வகை வாசிப்பு, பின்னாளில் அவர்கள் சிக்கலான கதைப்பொருளைக் கொண்ட நூல்களை வாசித்துப் புரிந்துகொள்ள உதவும்.
மலேசியாவில் தமிழில் எழுதப்படும் சிறுவர் இலக்கியத்துக்கான எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள?
மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவது மிக மிக அரிது. சமீபத்தில் சிறுவர் சிறுகதைகள் முனைவர் பட்ட ஆய்வாளர் உள்நாட்டில் எழுதப்பட்ட சிறுவர் சிறுகதைத் தொகுப்பு நூல்களை போதுமான அளவுக்குச் சேகரிக்கச் சிரமப்பட்டார். அந்த அளவுக்கு இங்கே குறைபாடு உண்டு. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் சிறுவர் இலக்கியத்தின்பால் காட்டும் அக்கறையின்மையும் அதன் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதே. இதுவரை ஒரே ஒரு தொகுப்பை மட்டுமே அது கொண்டுவந்திருக்கிறது என்பது அதன் போதாமைகளில் ஒன்று. எனவே சிறுவர் இலக்கிய வகைமையின் எதிர்காலம் விரும்பும்படி இல்லை.
பிருத்விராஜ்: உங்கள் கதைகளுக்கான பின்னூட்டம் சிறுவர்களிடமிருந்து வருகிறதா?
கோ.பு: நேரில் சந்திக்கும்போது கதைகள் பற்றிச் சொல்கிறார்கள். கடிதங்களோ தொலைபேசி வழியிலான உரையாடலோ பெரும்பாலும் நிகழ்வதில்லை. பள்ளிகளில் படைப்பாளனுடனான சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் இவவாறான உரையாடல் சாத்தியம். ஒருசில பள்ளிகளில் மட்டுமே இதில் அக்கறை காட்டுகிறார்கள்.
பிருத்விராஜ்: உங்கள் சிறுவர் கதைத் தொகுப்பான ‘மாயமலைத் தீவு’ நூலைப் பற்றி நாங்கள் மேலும் அறிந்துகொள்ள கொஞ்சம் சொல்லுங்கள்.
கோ.பு: இந்நூல் ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. சூழியல் விழிப்புணர்ச்சி, உயர்தர அறிவுத் திறனைத் தூண்டும் கதைகள், திகிலான கதைக்களம் என ஒன்பது கதைகளிலும் வாசிக்கலாம். இவை மாணவர்களை நாயகனாக வைத்து ஆக்கப்பூர்வ சிந்தனையைத் தூண்டும் புனைவுகள். 120 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கச் சித்திரம் வரையப்பட்டுள்ளது.
0195584905 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் நூலை வாங்கலாம்.