Home நாடு கோ.புண்ணியவானின் “கையறு” நாவல் – சிரம்பானில் அறிமுகம்

கோ.புண்ணியவானின் “கையறு” நாவல் – சிரம்பானில் அறிமுகம்

935
0
SHARE
Ad

சிரம்பான் : நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் நாவல் ‘கையறு’ சிரம்பான் நகரில் அறிமுகம் கண்டது.

கையறு நாவல் அதன் கதைக் களத்தால் வெகுவாக கவரப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் கண்டு வருகிறது. நாவல் வந்த புதிதில் சுங்கைப் பட்டாணி நகரிலும், தொடர்ந்தாற்போல் கூலிமிலும் பின்னர் சித்தியவானிலும் இதன் அறிமுகம் நடைபெற்றது. இரண்டாம் உலக யுத்தத்தை மையமாகக்கொண்டு, குறிப்பாக சப்பானிய ராணுவத்தினர் கையில் சிக்கி கொத்தடிமையாகி சின்னாபின்னமான மலேசிய இந்தியர் கதையை இந்த நாவல் விலாவாரியாகச் சித்திரித்துக் கொண்டு போகிறது.

1.10.23-இல் நடந்த இந்நிகழ்ச்சியை ராம்சா கல்விக் கழகம் ஏற்பாடு செய்தது. ராம்சா கல்வி நிலைய மண்டபத்திலேயே இந்த நாவல் நிகழ்ச்சி நடந்து நடிந்தது. 42 பேர் மட்டுமே கொள்ளளவு கொண்ட  மண்டபத்தில் ஓர் இருக்கையைக் கூட காலியாக விடவில்லை. யார் வரவேண்டும் என ரம்சாவே நிர்ணயித்திருந்தது, அவர்களை மட்டுமே அழைத்திருந்தது.

#TamilSchoolmychoice

ராம்சா கல்விக் கழகம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நம் பிள்ளைகளில் கல்வி முன்னேற்றத்துக்கு முதலிடம் கொடுக்கும் ராம்சா கல்விக் கழகம். மொழி சார்ந்து., பண்பாடு சார்ந்து , மாணவர்களுக்குத் தன்முனைப்பு பயிற்சி வழங்குவது சார்ந்து, சமூகப் பிரசனையைத் தீர்க்கும் வண்ணமாகவும் தீவிரமாக இயங்கி வருகிறது. அதே வேளையில் உள்நாட்டு நூல்களையும் அறிமுகப்படுத்த அது சுணங்கியதே இல்லை.

அதன் தலைவராக இருந்து செயலாற்றி வரும் ஆசிரியர் ராமச்சந்திரன் இதன் நிறுவனர். அவர் தன் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று தன் நேரத்தையும் அறிவையும் தன் சமூக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே செயலாற்றி வருகிறார். இந்த கல்விக்கழகம் மேலும் உற்சாகமாக இயங்க இடைநிலைப்பள்ளி முதல் திரு வேலனும், அந்த வட்டாரத்தின் கல்வி இலாகாவின் முக்கிய பிரமுகரான திரு கோவினும் கைகோர்த்து இந்தக் கழக செயல்பாடுகளைச் செவ்வனே நடத்தி வருகிறார்கள்.சிரம்பானில் மிக முக்கிய சமூக நலம் காக்கும் இயக்கமாக இது இயங்கி வருகிறது. இன்றைய தேதியில் அதன் சமூக செயல்பாட்டுக்கான பங்களிப்பு போற்றும்படி உள்ளது.

கோ.புண்ணியவானின் இந்த நாவல் தனித்துவம் வாய்ந்த காரணத்தால் ராம்சா இயக்கம் இதனை முன்னெடுத்தது. கையறு நாவல் இரண்டாம் உலக யுத்த காலத்தில் சப்பானிய கொடுங்கோல் ராணுவம் நம் மக்கள் மீது கருணையில்லாமல் நடத்திய மானுட வதையைப் பேசுகிறது. கடந்து போன இந்த வரலாற்றின் சுவடுகளைக கையறு நாவல் நம் சமூகத்தின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நம் சமூக வரலாறு பெரும்பாலும் இன்றைய தலைமுறையினருக்குப் போய்ச் சேரவில்லை. கையறு நாவல் மறந்து போன வரலாற்றை மீண்டும் நினைவுகூரும் வண்ணம் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டிருக்கிறது என்பதால் அது தனித்துவம் பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் வாசகர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் எனத் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த நாவல் அறிமுக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் கோ.புண்ணியவான் ‘மானுட வாழ்க்கைக்கு இலக்கியம் ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். முப்பது நிமிடத்துக்குள் இந்த பேச்சு அமைந்ததாலும் அதன் சாராம்சம் வெறும் இலக்கியம் என்பதாலும் அது சுரத்து குறையாமல் இருந்தது. கலந்து கொண்டவர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

கையறு நாவல் மதிப்புரையை இடைநிலைப் பள்ளி முதல்வரும், ராம்சா கல்விக்கழகத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவருமான திரு வேலன் வழங்கினார். ஒரு வரலாற்று நாவல் தன் புனைவுத் தன்மையிலிருந்து சற்றும் விலகாமலும் அதே வேளையில் உண்மை வரலாற்றின் பல தருணங்களை அது அழகுற வெளிப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார். நாவலை ஊடுறுத்துச் செல்லும் சம்பவங்கள் தான் வாசிக்கும்போது நேரில் கண்டதுபோன்று காட்சிப்படுத்தியதைச் சொன்னார். வாசித்து வாசித்து நாவலுக்குள்ளே நுழைய  மனம் கனத்துக் கொண்டே இருந்தது என்றார். சப்பானியர்களின் மானுடக் கொடுமை தாளாமலும், காலரா, பெரி பெரி, மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோயால்  நம் மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் மாண்டுபோன வரலாற்றை வாசிக்க வாசிக்க கண்களில் கண்ணீர் வடிந்ததாக அவர் சொல்லும் போது வந்திருந்த வாசகர்களின் கண்களில் நாவல் எப்போது வாசிக்கக் கிடைக்கும் என்று ஏக்கத்தைப் பிரதிபலித்தது.

நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிடும்போது நம் மக்கள் பட்ட சிரமங்களை நேரடியாக அனுபவித்தது போன்றிருந்தது என்று மேலும் குறிப்பிட்டார். இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாதிருந்த  மக்களின் நிலை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றார். ஒரு கட்டத்தில் நான்கைந்து நாட்கள் பயணம் செய்யும் கொத்தடிமைகளை  இயற்கை உபாதைகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆசனவாயில் ஒருவகை மருந்து திணிக்கப்பட்டதை சொன்னார். அந்த மருந்து, மருந்தாக அல்லாமல் மூன்று நான்கு நாட்களுக்கும் உடலுக்குத் தொல்லை தரும் விஷமாக  இருந்ததாகக் குறிப்பிட்டார். மூன்று நான்கு நாட்களுக்கு வெளிக்குப் போகவிடாமல் செய்ய அவர்கள் கையாண்ட ஈனச் செயல் இது என்றார். அவர்கள் வேலை நேரம் தடைபடாமல் இருக்க இந்த ஈவிரக்கமற்ற செயலை செய்தனர் சப்பானிய ராணுவம். கையறு நாவலுக்கு சமீபத்தில் சிறந்த நூலுக்கான விருதை தமிழகத்தின் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற் சோழன் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது என்று மேலும் ஒரு தகவலைச் சொல்லிப் பாராட்டினார்.

இந்த நாவல் அறிமுக நிகழ்ச்சியை திரு கோவின் அழகுற தொகுத்தார். அவரால் நிகழ்ச்சியின் நேர நிர்வாகம் நேர்த்தியாகக் கையாளப்பட்டது.

இறுதியாகப் பேசிய ராம்சா கல்விக் கழகத்தின் தலைவர் ராம்சா எந்ததெந்த விதத்தில் மக்களுக்குச் சேவையாற்றி வருகிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தார். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் பின்தங்கிவிடக்கூடாத நந்நோக்கம் கொண்டது என்றார். சோர்ந்துபோகும் மாணவர்களுக்கு தன்முனைப்பு வழங்கி ஊக்கப்படுத்தவும், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழிகாட்டவும்  தன் முதற்கொள்கையாக வைத்திருப்பதாகச் சொன்னார். ராம்சா கல்விக் கழகம் ஊக்கமுடன் செயல்பட பல நன்னெஞ்சர்கள் முன்வருவதை மனம் நிறைந்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களும் ஒரு வகையில் தங்களின் சமூகச் செயல்பாட்டுக்குக் கைகொடுப்பவர்களே என்று சொன்னபோது அரங்கில் கைதட்டல் உற்சாகமாக ஒலித்தது.

முன்னாள் தமிழ் நேசன் நிருபர், எழுத்தாளர் திரு. மாரியப்பன் கையறு நாவலை வெளியீடு செய்து பேசினார்.

நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்கு நிறைவு பெற்றது.