Home இந்தியா பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

910
0
SHARE
Ad

Maryam - Gita contest Featureமும்பை, ஏப்ரல் 3 – பகவத் கீதை போட்டியில் மரியம் சித்திக் என்ற மாணவி (படம்) முதலிடம் பெற்றுள்ளார். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக் மும்பை மீரா ரோட் காஸ்மோபாலிடன் பள்ளியில்  6-ம் வகுப்பு பயின்று வருகிறார். மும்பையில் நடந்த ‘கீதை சேம்பியன் லீக்’ போட்டியில் கலந்து கொண்டு இவர் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

மும்பையில் இஸ்கான் அமைப்பு கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்துத் தேர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில்  மரியம் ஆசிப் சித்திக் முதல் பரிசு பெற்றார்.

#TamilSchoolmychoice

பைபிளும் படித்து வருகிறார்

சித்திக் பைபிளும் படித்து வருகிறாராம். குரான் விரிவுரை ஆற்றுவதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறாராம். தற்போது மொழி பெயர்க்கப்பட்ட கீதையைப் படித்துள்ள மரியம், இஸ்கான் வைத்த ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்யும் தேர்வில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மரியம்,  “எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும். அடிக்கடி மத சம்பந்தமான நூல்களை ஓய்வு நேரத்தில் படிப்பேன். இந்தப் போட்டி குறித்து ஆசிரியர் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதினேன். போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோர் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்” என்று கூறினார் மரியம் சித்திக்.

மரியமின் தந்தை ஆசிப் சித்திக் இது குறித்துக் கூறியபோது, “மரியாதையான குடும்பம் எங்களுடையது, எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வெளியிட்டு, மும்பையின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சம்பவம் இது என்று  மும்பாயிலிருந்து வெளியாகும் ’மிட் டே’  ஆங்கிலப் பத்திரிகையின் இணையத் தளம் வர்ணித்துள்ளது. மரியம் மற்றும் அவர் தந்தையிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளதுடன் அவர்களின் படங்களையும் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Maryam wins Bhagwad Gita contest

மிட் டே வெளியிட்டுள்ள மரியம் சித்திக் குடும்பத்தாரின் படம்