புதுடெல்லி, மார்ச் 9- பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து, நாடு முழுவதும் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,370ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,370-ஆக உயர்ந்துள்ளது”.
“இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,190ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில், அதிகபட்சமாக 322 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 5,521 பேர் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். ராஜஸ்தானில் 321 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அங்கு, 5,949 பேரை இந்நோய் தாக்கியுள்ளது.”
“இதைப்போல மகாராஷ்டிராவில் 211, கர்நாடகத்தில் 55, தெலுங்கானாவில் 63, காஷ்மீரில் 11, கேரளாவில் 9, அரியானாவில் 27, பஞ்சாபில் 47, உத்தரபிரதேசத்தில் 16, ஆந்திராவில் 15 பேர் என நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.