கோலாலம்பூர், மார்ச் 11 – மஇகா தேசியத் தலைவரும், இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தன்னைப் பற்றி நட்பு ஊடகங்களில் வலம் வரும் காணொளியில், தான் பேசுவது போல் உள்ள கருத்துக்களை மறுத்துள்ளார்.
இது குறித்து பழனிவேல் நேற்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில்,”மலேசியாகினி இணையத்தளம் மற்றும் இன்னும் பல இணையத்தளங்களில் ‘பழனிவேலின் பரபரப்பை ஏற்படுத்தும் காணொளி’ என்ற தலைப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த காணொளி போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் உள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானது. நான் அது போன்ற கருத்துகளை எங்குமே கூறியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையில் இது குறித்து புகார் அளித்திருக்கும் பழனிவேல், அந்த காணொளியை உருவாக்கியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“சில காரணங்களுக்காக இப்படி ஒரு பொய்யான காணொளியை உருவாக்கி இவ்வளவு கீழ்தரமான நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்து அதிர்ச்சியடைகின்றேன். நடக்கவிருக்கும் மஇகா மறுதேர்தலில் என்னுடைய தலைமைத்துவத்திற்கு கிளைத்தலைவர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவைக் கண்டு தான் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று கருதுகின்றேன்”
“நான் மீண்டும் கூறுகின்றேன். அந்த காணொளி முற்றிலும் போலியானது. உண்மைக்குப் புறம்பான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நான் அப்படி ஒரு தவறான கருத்துக்களை எங்கும் கூறியதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாகக் கூறுகின்றேன்” என்று பழனிவேல் தெரிவித்துள்ளார்.