Home உலகம் சிட்னியிலிருந்து கோலாலம்பூர் வந்த ஏர் ஆசியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு! மெல்போர்னுக்கு திரும்பியது!

சிட்னியிலிருந்து கோலாலம்பூர் வந்த ஏர் ஆசியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு! மெல்போர்னுக்கு திரும்பியது!

498
0
SHARE
Ad

மெல்போர்ன், மார்ச் 10 – இன்று பிற்பகலில் சிட்னியிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, மெல்போர்னுக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனை ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. விமானத்தின் வழிகாட்டும் கருவிகளும், வரைபடத்தைக் காட்டும் திரைகளும் முறையாக செயல்படாத காரணத்தால், விமானம் மெல்போர்னுக்குத் திரும்பிச் சென்றது என ஆஸ்திரேலிய பொது வான் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

D7223 என்ற வழித்தட எண் கொண்ட அந்த விமானம் மெல்போர்ன் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 11 மணி) பத்திரமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.air-asia-x

#TamilSchoolmychoice

தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின்னர், 3 மணி நேரத்திற்குப் பின்னர் மாலை 5.13 மணிக்கு மீண்டும் மெல்போர்ன் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் இன்றிரவு 10.20 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனை கோலாலம்பூர் விமானப் போக்குவரத்து தகவல் மையமும் உறுதிப்படுத்தியது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட ஐந்து மணி நேரம் தாமதமாக அந்த விமானம் கோலாலம்பூர் வந்தடைந்தது.

மெல்போர்ன் விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தின் உள்ளேயே அமர வைக்கப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டன எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்திலிருந்து தாங்கள் வெளியேற வேண்டுமென பயணிகள் கேட்டுக் கொண்டாலும் அவர்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மெல்போர்ன் விமான நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டபோது, விமானத்தின் குளிர்சாதன வசதிகள் நிறுத்தப்பட்டதாக ஒரு பயணி புகார் செய்தார் என ஆஸ்திரேலிய உள்ளூர் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

“பயணிகள் வாந்தி எடுக்கின்றனர். அனைவரும் உடல் நலமின்றி இருக்கின்றனர்” என பெண் பயணி ஒருவர் சிட்னி வானொலி நிலையத்திடம் தெரிவித்ததாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “மெல்போர்ன் விமான நிலையத்தில் ஒரு மணி நேரமாக காத்திருக்கின்றோம். விமானத்தின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. குளிர்சாதன வசதி ஏதும் இல்லை. ஒரே புழுக்கமாக இருக்கிறது” என்றும் அந்தப் பயணி வானொலி நிலையத்திடம் புகார் செய்திருக்கின்றார்.

இதற்கிடையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இன்றைய சம்பவம் முன்கூட்டியே பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை என்றும், சில தகவல் ஊடகங்களில் வந்தது போன்று அவசர தரையிறக்கம் ஏதும் இல்லை என்றும் ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

அனைத்துலக தர, மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்பவே இன்று விமானம் மெல்போர்னுக்கு திருப்பி விடப்பட்டது என்றும் ஏர் ஆசியா நிறுவனம் அறிவித்துள்ளது.