Home நாடு மலேசியா – இந்தியா நட்புறவு: இந்திய கடற்படை கப்பல்கள் போர்ட் கிள்ளான் வருகை!

மலேசியா – இந்தியா நட்புறவு: இந்திய கடற்படை கப்பல்கள் போர்ட் கிள்ளான் வருகை!

693
0
SHARE
Ad

போர்ட் கிள்ளான், மார்ச் 12 – நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களுடன் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் நான்கு நாட்கள் பயணமாக, மலேசியா வந்துள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல் ஐஎன்எஸ் கேசரியில், நேற்று இரவு விருந்து உபசரிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், மலேசிய, இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளுடன், மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள், அதனுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

INS KESARI1

#TamilSchoolmychoice

(வாத்தியக் கருவிகளை வாசிக்கும் வீரர்கள்)

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்பட்ட இந்த இரவு விருந்தை மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ்.கேசரி, ஐஎன்எஸ்.திர், ஐஎன்எஸ்.வருணா, ஐஎன்எஸ்.சுதர்ஷினி ஆகிய நான்கு கப்பல்கள், போர்ட் கிள்ளான் துறைமுகத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்தடைந்தன.

இந்த 4 கப்பல்களில் ஐஎன்எஸ்.திர், முழுவதும் இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 1986-ல் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட முதல் கப்பல் இதுவாகும்.

கப்பலில் விருந்து

INS KESARI4

(கேக் வெட்டும் இருநாட்டு கடற்படையின் மூத்த அதிகாரிகள்)

எதிரிகளை நொடிப் பொழுதில் துவம்சம் செய்துவிடும் ஆற்றலும், வல்லமையும் பெற்ற அத்தகைய பிரம்மாண்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் கேசரியின் ஒரு பகுதியில், நட்புறவோடு அழகிய வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டு, பேண்ட் வாத்தியக் கருவிகள் முழங்க, விருந்துக்கு வரும் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெள்ளை நிற கடற்படை சீருடையில் மிடுக்கென நடந்து வந்த வீரர்கள், வந்திருந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு தங்களை அறிமுகம் செய்து கொண்டு, கப்பல்கள் குறித்தும், தங்களின் பணிகள் குறித்தும் பொறுமையுடன் விளக்கமளித்தனர்.

விருந்தினர்களுக்கு சுவையான இந்திய உணவுகளுடன், பழரசம் மற்றும் மதுபான வகைகளுடன் விருந்து வழங்கப்பட்டது.

மலேசியாவின் முதல் கடற்படைத் தலைவர்

INS KESARI

(பயிற்ச்சிக்கு வந்திருக்கும் இந்திய கடற்படை வீரர்களுடன் டத்தோ மியார் உரையாடுகின்றார்)

இந்த நிகழ்வில் பேசிய, இந்திய கடற்படை போர்க்கப்பலின் மூத்த அதிகாரி கேப்டன் சிவராம் ஆர். அய்யன், பயிற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மலேசிய கடற்படைக்கும், அரசாங்கத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய, மலேசிய கடற்படைகளில் உள்ள புதிய தலைமுறையினர் மத்தியில், கலாச்சார புரிந்துணர்வும், பரஸ்பர உறவும் இதன் மூலம் மேலும் வலுவடையும் என தான் நம்புவதாக அய்யன் தெரிவித்தார்.

அவருக்குப் பின் பேசிய மலேசிய கடற்படையின் மூத்த அதிகாரி (ரியர் அட்மிரல்) டத்தோ பாலாவன் மியார் ரோஸ்டி, மலேசியாவிலுள்ள இந்தியர்களுடன் சகோதரத்தும் நிலவுவதால், இந்திய கலாச்சாராம் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், மலாய்காரர்களின் திருமணம், உணவுமுறை போன்றவற்றில் கூட இந்திய கலாச்சாரங்கள் கலந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மலேசியாவில் பல இந்தியர்கள் தேசிய அளவில் உயர் பதவி வகிப்பதாகக் குறிப்பிட்ட மியார், முதல் மலேசிய கடற்படைத் தலைவர் இந்தியரான டான்ஸ்ரீ தனபால் சிங்கம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் மலேசிய அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்திருப்பதோடு, மக்கள் மத்தியில் மிகச் சிறந்த தலைவர்களாக விளங்கியதாகவும் மியார் குறிப்பிட்டார்.

மலேசியாவில் பயிற்சிக்காக வந்திருக்கும் 137 கடற்படை வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளை சொல்லிக் கொண்ட மியார், “இது தான் உங்கள் வாழ்வில் பொன்னான தருணம்” என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கேப்டன் சிவராம் ஆர். அய்யன் தனது பேச்சை நிறைவு செய்கையில், “தெரிமா காசி” என்று மலாய் மொழியிலும், டத்தோ பாலாவன் மியார் ரோஸ்டி தனது பேச்சை நிறைவு செய்கையில், “சுக்ரியா” என்று இந்தியிலும் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

இந்நிகழ்வின் முடிவில், தயாராக இருந்த கடல் வடிவிலான கேக்கை, மலேசியாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, கெராக்கான் தேசிய உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை ஆகியோர் முன்னிலையில், கேப்டன் சிவராம் ஆர். அய்யன் மற்றும் டத்தோ பாலாவன் மியார் ரோஸ்டி ஆகிய இருவரும் வெட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

இந்தியா – மலேசியா நல்லுறவு

IMAG1945

(இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி)

மலேசியாவில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் தலைவர் (இந்தியத் தூதர்) டி.எஸ்.திருமூர்த்தி செல்லியலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், “மலேசியாவில் பயிற்சிக்காக இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் வந்துள்ளன. இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. காரணம், இது போன்ற நிகழ்கள் இரு நாட்டின் நட்புறவுக்கு ஒரு பாலமாக அமையும். இந்தியா, மலேசியாவிற்கிடையிலான உறவு இதன் மூலம் மேலும் வலுவடையும்.”

“இந்நிகழ்வுகள் மூலம், இரு நாட்டு கடற்படையிலும் பணியாற்றுபவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவதோடு, உயர் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பினையும் பெறுகிறார்கள். குறிப்பாக, தற்போது பயிற்சிக்காக வந்திருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள். இது அவர்களின் முதல் மலேசியப் பயணம். மலேசியாவின் கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அவர்களுக்கு அமைந்திருக்கின்றது.”

“அதேவேளையில், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு மலேசியா அனுமதி வழங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்திருக்கின்றது. எனவே, இது இரு நாட்டின் நட்புறவு மேலும் தொடர்வதற்கு இந்த வெற்றிகரமான நிகழ்வு முக்கியப் பங்களிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட, முன்னாள் வெளியுறவுத்துறை துணையமைச்சரும், கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ கோகிலன் பிள்ளை செல்லியலுக்கு அளித்த நேர்காணலில், “இது போன்ற நிகழ்ச்சி வரவேற்கத்தக்க ஒன்று. நம்முடைய நட்பை மேலும் அதிகரிக்கின்றது.” என்று தெரிவித்தார்.

INS KESARI3

(டத்தோ கோகிலன் பிள்ளை)

“மலேசியாவில் இருந்தும் வீரர்கள் வெளிநாடுகளுக்கு பயிற்சி பெற செல்கிறார்கள் என்று குறிப்பிட்ட கோகிலன் பிள்ளை, அந்த பயணங்களின் போது, அந்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கின்றது” என்றும் குறிப்பிட்டார்.

நெகிழ்ச்சியான தருணம்

தங்களது தாய், தந்தையர், பிறந்த ஊர், சொந்த பந்தம் என அனைவரையும் பிரிந்து, தேசத்தைப் பாதுகாக்க கடற்படையில் சேர்ந்து பணியாற்றும் இந்திய வீரர்களுடன் கைகுலுக்கி, அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் எனக்கு கிடைத்தது.

அதில் வீரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில், இந்தியக் கடற்படையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் பற்றி பெருமையுடன் பேசினார்.

IMAG1894

(இந்திய கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ்.சுதர்ஷினி)

கடற்படையில் சேரும் பொழுது 87 கிலோ உடல் எடையில் இருந்த தான், கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையாலும் 65 கிலோவாகக் குறைந்து, தற்போது சிக்ஸ் பேக்குடன் வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மலேசியாவிற்கு தான் வருவது இது தான் முதல் முறை என்று குறிப்பிட்ட அவர், இங்கு பெரும்பான்மையான கடைகளில் இந்திய உணவுகள் கிடைப்பதோடு, எல்லா இடங்களில் இந்தியர்கள் பரவி இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இரு நாட்டு தேசிய கீதங்கள் அடுத்தடுத்த முழங்க, மெய்சிலிர்த்து அதற்கு மரியாதை செலுத்தி விட்டு, இப்படி ஒரு பெருமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் ஒரு செய்தியாளனாக நெஞ்சை நிமிர்த்தி அங்கிருந்து விடை பெற்றேன்.

வாழ்க மலேசியா – இந்தியா நல்லுறவு!

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்