கொழும்பு, மார்ச் 13 – இந்தியப் பெருங்கடலில் இருக்கும் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் அவரை இரகசியமாக சந்திக்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இன்று இலங்கை சென்றுள்ள மோடி, அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது வாழ்வாதாரத்தை இழந்த ஈழத்தமிழர்களுக்கு, இந்தியா கட்டி கொடுத்துள்ள வீடுகளை மோடி அந்தந்த மக்களுக்கு ஒப்படைக்க இருக்கிறார்.
இது தவிர இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட இருக்கிறார். மேலும், இந்த பயணத்தின் போது இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சி தலைவர் நிமல் ஸ்ரீபால் டீ சில்வா ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.
மேலும், இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசவும் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், பிரதமர் மோடியை சந்தித்துப் பேச தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே மீது ஏராளமான ஊழல் புகார்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் எதாவது ஒரு புகாரில் அவர் கைதாவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்றும் இலங்கை வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதனால், தன்னை தற்காத்துக் கொள்ள ராஜபக்சே மோடியை சந்தித்து உதவி கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஒருவரை மோடி சந்தித்து பேசுவாரா? என்ற கேள்வி குறியும் எழுந்துள்ளது. எனினும் இந்த தகவலை இந்திய-இலங்கை வட்டாரங்கள் உறுதிபடுத்த மறுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.