புதுடெல்லி, மார்ச் 13 – நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற சம்மன் காரணமாக நிலைகுலைந்து போன முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து, மன்மோகன் சிங் வீடு வரை நடத்தப்பட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்தது. நீதிபதியின் கடும் கண்டனத்துக்கு பின் இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரித்தது.
சுரங்க ஓதுக்கீடு தொடர்பாக நிலக்கரித் துறையை பொறுப்பில் வைத்திருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஹிண்டால்கோ நிறுவனம், மன்மோகன் சிங், உட்பட 6 பேரும் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிபதி பரத் பரசர் உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதமர் ஒருவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வட்டாரத்தில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்மன் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங்,
‘‘நான் நிலைகுலைந்துள்ளேன். இந்த வழக்கில் உண்மைகளை எடுத்துக் கூறி நான் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பேன்’’ என்றார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றியும், மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்க வேண்டியது பற்றியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.
அனைத்து முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை வரவழைத்தார் சோனியா. மன்மோகன்சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரது வீடு நோக்கி ஒற்றுமை நடை பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டது.