மும்பை, மார்ச் 13 – இந்தியாவின் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ‘ஸ்னாப்டீல்’ (Snapdeal) நிறுவனத்தில் முதல் முறையாக, நேரடி நிதி முதலீடு செய்ய அலிபாபா மற்றும் கூகுள் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இணைய வர்த்தகத்தில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் அலிபாபா நிறுவனம், இந்திய சந்தையில் தடம் பதிக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. ஏற்கனவே, உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இங்கு வலுவாக காலூன்றி உள்ள நிலையில், அலிபாபாவும் களத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்னாப்டீல் நிறுவனமும் எவ்வித தகவல்களை வெளியிடாத நிலையில்,
முன்பு, இந்தியாவில் முன்னணியில் இருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட 1 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெற தயாராக உள்ளது தெரிய வருகின்றது.
மேலும் அலிபாபாவைப் போன்று இணைய வர்த்தகம் மற்றும் விளம்பரத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் கூகுள் நிறுவனம், இந்தியாவின் ஸ்னாப்டீல் மற்றும் ‘இன்மொபி’ (Inmobi) நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இன்மொபி நிறுவனத்தை கூகுள் கைபற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இணைய வர்த்தக தளத்தில் இந்தியாவை பொருத்தவரை பிளிப்கார்ட் நிறுவனம் ‘மின்திரா’ (myntra) நிறுவனத்தை 370 மில்லியன் டாலர்களுக்கு கைபற்றியது தான் மிகப்பெற்றிய வர்த்தகமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கும் அலிபாபா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முயற்சி, இணைய வர்த்தகத்தின் தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.