Home தொழில் நுட்பம் “முரசு அஞ்சல் நினைவலைகள்” – பி.எம்.மூர்த்தி

“முரசு அஞ்சல் நினைவலைகள்” – பி.எம்.மூர்த்தி

1243
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 13 – (நாளை மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா நடைபெறுகின்றது. இந்த வரலாற்றுபூர்வ தருணத்தில் மலேசிய கல்வி அமைச்சின் அதிகாரியும், மலேசியாவில் முரசு அஞ்சல் செயலியை முதன் முதலாகப் பயன்படுத்திய காராக் ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் கணினிக் கழகப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவருமான பி.எம்.மூர்த்தி (படம்) தமது நினைவலைகளோடு ‘முரசு அஞ்சல்’ ஆரம்ப கால கட்டத்தை இந்தக் கட்டுரையில் திரும்பிப் பார்க்கின்றார்)P.M.Murthy Photo

1986 பகாங், காராக் ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் துணைத் தலைமையாசிரியராகவும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராகவும் என் பணியை மேற்கொண்டிருந்த காலம். 220 மாணவர்கள், 10 ஆசிரியர்களைக் கொண்ட ஒரு சிறு பள்ளி அது. பலகைகளால் கட்டப்பட்ட அசல் தோட்டப்புறப் பள்ளி!

தலைமையாசிரியர் தங்கவேலுவின் அற்புதப் பணிகள்

#TamilSchoolmychoice

அந்தப் பள்ளியின் ஒட்டுமொத்த சிறப்பே அதன் தலைமையாசிரியர்தான்! (அமரர்) வீ.தங்கவேலு,PPN.PJK. அவர்கள். சுறுசுறுப்புக்குப் பேர்போனவர்! தலைமைத்துவத்திற்கும் நிருவாகத் திறனுக்கும் முன்னுதாரணமானவர்.

தோட்டப்புறப் பள்ளிதானே அதுவும் சிறு பள்ளிக்கூடந்தானே என்கிற சிந்தனையே இல்லாமல் எல்லா நிலையிலும் சிறந்த பள்ளிக்கூடமாக ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியை நிலைநாட்ட வேண்டும் என்று அரும்பாடு பட்டவர்.

புதுமையாக எந்த ஆலோசனையை முன் வைத்தாலும் அதற்கு உடனே ஒப்புதல் தெரிவித்து செயல்படுத்துங்கள் என்று ஒப்புதல் தந்து ஆதரவுக்கரம் நீட்டுபவர். அதற்கு ஆகும் செலவை எப்படியும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார். உள்ளவரிடம் சென்று முறையோடு அணுகி நயமாகப் பேசி நிதியுதவியைப் பெற்றுவிடுவதில் வல்லவர்! அது தோட்ட நிருவாகிகளாகட்டும், தொழிலதிபர்களாகட்டும், சட்டமன்ற-நாடளுமன்ற உறுப்பினர்களாகட்டும், யாரையுமே விட்டுவைக்காமல் அவர்களிடமிருந்து எதையாகிலும் எப்படியாகிலும் பள்ளிக்காகப் பெற்று விடுவார்!

P.M.Murthy article teachers

அந்தக் காலத்தில் காராக் ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியவர்கள் – மேலே இருப்பவர் தலைமையாசிரியர் வீ.தங்கவேலு. கீழே இரண்டாவதாக கட்டுரையாளர் பி.எம்.மூர்த்தி. மூன்றாவதாக ஆர்.குணசேகரன் எனப் பெயர் குறிப்பிடப்பட்டவர்தான் தற்போது செனட்டராகப் பதவி வகிக்கும் பகாங் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.குணசேகரன்

எங்களுடைய பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக் கூட்டத்தைக் கட்டாயமாக ஒரு சட்டமன்ற உறுப்பினரோ நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோதான் வந்து தொடக்கி வைப்பதைக் கட்டாய நிகழ்வாக வைத்துக் கொண்டார். மறைந்த பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை துணையமைச்சருமான டத்தோ சாங் சியங் சன் மற்றும் பிளாஙாய் சட்டமன்ற உறுப்பினரும் இப்போதைய பகாங் மாநில மந்திரி பெசாரும் ஆகிய டத்தோஸ்ரீ அட்னான் யாகோப், இவர்களிருவரையும்  ஆண்டுதோறும் எங்கள் பள்ளியின் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துவிடுவார்.

அவர்களின் அந்த வருகையைக் காரணமாகக் கொண்டு நிதியுதவிகளையும் அவர்களிடமிருந்து பெற்றுவிடுவார். அதனால்தான், அந்தக் காலத்திலேயே பகுதி உதவிப்பெறும் ‘பந்துவான் மோடால்’ பள்ளிக்கூடமான அந்தத் தோட்டப்புறப் பள்ளியில், கூடுதலான வகுப்பறைகளும் நிறைய நவீன-தொழில்நுட்ப கற்றல்-கற்பித்தல் வசதிகளும் கருவிகளும் இருந்தன! தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி, casette player, over head projector, slide projector, audio-lab earphones. Public announcement system, புகைப்படக்கருவி, electrical polystrene cutter என ஒரு நீண்ட பட்டியலே போடலாம்.

தோட்டத் தமிழ்ப் பள்ளியில் கணினி

அந்த நீண்ட பட்டியலில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வசதி அல்லது கருவி கணினி வசதியாகும். அந்தக் காலகட்டத்தில் ‘கம்ப்யூட்டர்’ என்ற சொல்லே மிகவும் அன்னியமான ஒரு சொல்லாகத் தமிழ்ப்பள்ளி மத்தியில் இருந்து வந்தது.

P.M.Murthy First Tamil school computer

காராக் ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் கணினியோடு மாணவர்கள்

ஒருநாள் இந்தக் ‘கம்ப்யூட்டர்’ பற்றியும் அதனால் அலுவலகப் பணிகளை எவ்வாறு எளிதாக்கிக் கொள்ளலாம் என்பதோடு  மாணவர்களுக்கும் அதன் மூலம் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்றும் தலைமையாசிரியரான அவரிடம் எடுத்துச் சொன்னோம். புதிய சிந்தனைக்கும் திட்டத்திற்கும் எப்பொழுதுமே ஆதரவளிக்கும் அவர் உடனே அந்தப் பரிந்துரையை  ஏற்றுக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் பள்ளிக்கு ஒரு கணினி வாங்கும் திட்டத்தில் இறங்கினார்.

முதலில், கணினி வாங்குவதற்குத் தேவைப்பட்ட நிதியை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அட்னான் யாகோப் அவர்களிடம் பெறுவதில் வெற்றி கொண்டோம். அதன் பிறகு, அந்தக் காலக்கட்டத்தில் கணினி விற்பனைத் துறையில் புதிதாகக் கால்பதித்திருந்த ம.இ.கா.வின் Maika Systems துணை நிறுவனத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தலைநகரில் உள்ள அதன் அலுவகத்திற்குச் சென்று (IBM) MS 286 வகை கணினி ஒன்றையும் Epson அச்சியந்திரம் ஒன்றையும் வாங்கினோம்.

கணினிக்குள் தமிழ்ச் செயலி

கணினியை வாங்கிய கையோடு அதில் கட்டாயம் தமிழ் செயலி ஒன்றையும் பொருத்த வேண்டுமென்று தலைமையாசிரியரிடம் கூறினேன். காரணம், அந்தக் காலக்கட்டத்தில் பள்ளியில் இருக்கும் தமிழ் தட்டச்சுக் கருவியில்தான் அனைத்து ஆவணங்களையும், குறிப்பாகத் தேர்வுத் தாள்களையும் அறிக்கைகளையும் கடிதங்களையும், தயாரித்துக் கொண்டிருந்தோம்.

பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் என்கிற முறையில் அதன் சுற்றறிக்கைகளையும் கூட்டக் குறிப்புகளையும் ஆண்டறிக்கைகளையும் நான்தான் அந்தத் தமிழ் தட்டச்சில் அடித்துத் தயாரித்துக் கொடுப்பேன். எனவே, புதிதாக வாங்கும் கணினியில் தமிழ் செயலி இருந்தால் மேற்குறிப்பிட்ட வேலைகள் எல்லாம் எளிதாக முடியுமே என்று எண்ணினேன்.

முரசு தமிழ் செயலியை அதன் தோற்றுநர் முத்தெழிலன் முரசு நெடுமாறன் அவர்கள் அப்பொழுதுதான் தமிழ்க்கூறு நல்லுககிற்கு அதனை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். தலைமையாசிரியர் திரு.வீ.தங்கவேலு பந்திங்காரர் என்பதால் “பிரச்சனையே இல்லை. பாப்பா பாவலர் முரசு நெடுமாறன் அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் வீடு போர்ட் கிள்ளானில்தான் இருக்கிறது. நேரே, அவரிடமே சென்று அந்தத் தமிழ்ச் செயலியைப் பெற்றுவிடலாம்!” என்று உற்சாகமாய் பதில் கூறினார்.

முரசு அஞ்சல் பயன்படுத்திய முதல் தமிழ்ப் பள்ளி

அதன்படியே, ஒரு மாலைப் பொழுது ஐயா (முனைவர்) முரசு நெடுமாறன் இல்லத்திற்குச் சென்று அவரையும் முத்தெழிலன் அவர்களையும் சந்தித்து எங்கள் எண்ணத்தைக் கூறினோம்.  “நாட்டிலேயே முரசு தமிழ்ச் செயலியை வாங்க வந்திருக்கும் முதல் தமிழ்ப்பள்ளி நீங்கள்தான்! ரொம்ப மகிழ்ச்சி!” என்று கூறி எங்களை அன்போடு வரவேற்று எங்கள் தேவையை நிறைவேற்றி வைத்தனர்.

P.M.Murthy article doc in Murasu Anjal

1990ஆம் ஆண்டுகளில் முரசு அஞ்சலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்று…

முரசு தமிழ்ச் செயலி 6 பொருத்தப்பட்ட புதிய கணினியோடு பள்ளிக்குத் திரும்பினோம். பள்ளியின் கணினிப் பொறுப்பாளர் (Penyelaras Kelab Komputer Sekolah) என்னும் புதிய பதவியும் எனக்கு வந்து சேர்ந்தது. தமிழ்த் தட்டச்சுக் கருவியை (typewriter) மட்டுமே இயக்கத் தெரிந்த எனக்குக் கணினியில் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சு செய்வது என்பது மிகப் பெரிய சவாலாகிப் போனது. அடிப்படை கணினி அறிவு சிறிதும் இல்லாத நிலையில்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

முரசு முத்தெழிலன் சொல்லிக் கொடுத்த “கணினி பாடத்தை” குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டு இரவும் பகலும் பாராமல் சுய பயிற்சி மேற்கொண்டேன். என் வீடும் அப்பொழுது பள்ளி வளாகத்திலேயேதான் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு வசதியை முன்னாள் தலைமையாசிரியரான (அமரர்) திருவாளர் A.இராமசாமி அவர்கள் ஏற்படுத்தி இருந்தார்.

எனக்குத் திருமணமாகாத காலம் அது. எனவே, அந்தக் காலக்கட்டத்தில் 24 மணி நேரமும் பள்ளி வேலைகளிலேயே மூழ்கிக் கிடந்த “பொற்காலம்” அது.

பள்ளித் துணைத் தலைமையாசிரியர், ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர், சாரணர் இயக்கப் பொறுப்பாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர், ரெஞ்சோக் தோட்டத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் என இப்படி பல பொறுப்புகளைச் மகிழ்ச்சியோடும் ஈடுபாட்டோடும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்த காலம் அது!

முரசு அஞ்சலோடு அனுபவங்கள்

எப்படியாவது கணினியில் ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைகளைக் கற்றுத் தேறவேண்டும்; தேரிய பிறகு பள்ளி-நிருவாகப் பணிகளைக் கணினிமயப்படுத்த வேண்டும்; அதன்பின் மாணவர்களுக்கும் கணினியை அறிமுகப்படுத்தி அவர்களையும் கணினிப் பக்கம் கொண்டுவரவேண்டும் என்கிற வெறியோடும் தீவிரத்தோடும் சொந்தமாகக் கணினியை இயக்கப் பழகி வந்தேன்.

முரசு தமிழ்ச்செயலியை முடுக்கி அதன் விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சுச் செய்து ஓர் ஆவணத்தைத் தயாரிப்பதற்கும் சாதாரண தமிழ்த் தட்டச்சுப் பொறியில் ஓர் ஆவணத்தையோ கடிதத்தையோ தயாரிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன!

P.M.Murthy article Muthu Cert

முரசு அஞ்சலைப் பயன்படுத்திய முதல் தமிழ்ப் பள்ளி என்ற அங்கீகாரத்தை அன்று முத்து நெடுமாறன் வழங்கிய கடிதம்…

இப்பொழுது இருக்கும் Microsoft Word போன்ற சொல் செயலாக்க முறை அப்பொழுது இல்லை. சுட்டியை நகர்த்தி விரைவாகவும் சுலபமாகவும் கணினியை இயக்குவதற்குக் (mouse) கருவியும் அப்பொழுது இல்லை. நமக்கு என்ன வேண்டும் என்று கணினிக்குக் கட்டளையிடுவதற்கு விசைப்பலகையில் இருக்கும் எந்தெந்த விசையும் குறியீடும் என்னென்ன செய்துகொடுக்கும் என்று மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு நம் தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது.

மேலும், எவ்வளவு இடம் தள்ள (Margin) வேண்டும், எவ்வளவு இடைவெளி விட (Spacing) வேண்டும், சாய்வு (Italic) எழுத்து வேண்டுமா, எழுத்துகளைத் தடிப்பாக்க (Bold) வேண்டுமா என்று எல்லாவற்றையும் தட்டச்சு செய்துதான் கணினிக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒரு சிறு வாக்கியத்தைத் தட்டச்சு செய்வதற்கு “ \\ ” (Slash) மற்றும் Ctrl + Alt விசைகளைப் பலமுறை அழுத்த வேண்டியதாயிருக்கும்.

இப்படியான போராட்டத்துக்கு இடையில் கணினியோ முரசு செயலியோ எப்பொழுதாவது முடங்கிப் போனால் (பலமுறை முடங்கிப் போயிருக்கிறது!) ஒட்டுமொத்த கணினி “செட்டையே”  (கணிணி, திரை, அச்சு இயந்திரம் அனைத்தையும்) கழட்டி எடுத்து காரில் போட்டுக்கொண்டு நானும் தலைமையாசிரியரும் போர்ட் கிள்ளானில் இருக்கும் முரசு ஐயா  வீட்டிற்குப் “படையெடுத்து” விடுவோம்!

“முரசு” இல்லத்தின் விருந்தோம்பல்

ரெஞ்சோக் தோட்டத்திலோ அருகில் இருந்த காராக் பட்டணத்திலோ அப்பொழுது கணினி பழுதுபார்க்கும் வசதி இருந்ததாக எனக்கு நினைவில்லை. மேலும், தமிழ்ச்செயலிக்கு “நோய்” வந்தால் அதற்கு “மருத்துவம்” பார்க்கக் கூடிய ஒரே இடமாக “முரசு” இல்லம் மட்டுமே இருந்தது!

இப்படிப் பல முறை 100 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முரசு ஐயா வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு “ஓடியிருக்கிறோம்”! இதில் வேடிக்கையான ஒன்று என்னவென்றால், கணினியில் கோளாறு ஏற்பட்டது என்பதைவிட அதனைச் சரியாக இயக்கத் தெரியாததாலோ ஒரு குறிப்பிட்ட விசையைத் தேவையில்லாமல் அழுத்தி விட்டதாலோதான் அது இயங்காமல் போயிருக்கும்!

அரக்கப் பரக்க 2 மணிநேர பயணம் செய்து முரசு ஐயா இல்லம் போய்ச் சேருவோம். கணினிக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ, செலவு வைத்து விடுமோ என்று பரபரப்பாய் முத்தெழிலன் அல்லது அவர் இளவல் அரசு தங்கள் அலுவல் முடிந்து வீடு திரும்புகிற வரையிலும் அவர்களுக்காகக் அவர்கள் வீட்டிலேயே காத்துக் கொண்டிருப்போம்.

வந்தவர்கள் எங்களைப் பார்த்து வணக்கம் கூறிய கையோடு நாங்கள் “கட்டி” சுமந்துகொண்டு வந்திருக்கிற கணினியை ஒரு நோட்டமிடுவார்கள். அவர்களுக்குப் புரிந்துவிடும்.

சிரித்துக் கொண்டே “கணினிக்கு ஒன்றுமில்லை ஐயா! இதோ, இந்த விசையை நீங்கள் தவறாக அழுத்தி விட்டிருக்கிறீர்கள்! அவ்வளவுதான். மற்றபடி இது நன்றாகவே உள்ளது” என்று கூறுவார்கள். நாங்களும் எங்கள் அறியாமையை எண்ணி சிரித்துக் கொள்வோம்!

அவர்கள் அதோடு நின்று விடாமல் வீடு தேடிவந்த எங்களுக்கு முரசு செயலியைப் பற்றிய மேலும் பல செயல்முறைகளைப் பொறுமையோடு  சொல்லிக் கொடுப்பார்கள். அதனூடே கணினிகள் தொடர்பான ஆகக் கடைசியான, புதியத் தகவல்களையும் அதன் அடுத்த கட்ட பரிணாமங்களையும் கணினி யுகத்தில் நடக்கப் போகும் புரட்சிகளைப் பற்றியும் எங்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.

பிள்ளைகள் இப்படிக் கணினிக் கல்வியை அள்ளி வழங்கும் கொடையாளிகளாக இருந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள் விருந்தோம்பலை அள்ளி வழங்கும் கொடையாளிகளாக இருந்தார்கள்!

நாங்கள் அவர்கள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த நேரம் உணவு வேளையாக இருந்தால் கண்டிப்பாக எங்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறப்படும். மாலை வேளையாக இருந்தால் பலகாரத்தோடு சுவையான தேநீரும் வழங்கப்படும்.

ஒவ்வொரு முறையும் எங்களை அன்போடும் பரிவோடும் உபசரித்து வழியனுப்பி வைத்த திருமதி முரசு நெடுமாறன் அவர்களை என்றுமே மறக்க முடியாது!

அன்னாருடைய அந்த அன்பான உபசரிப்பை எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் இனிமையான நினைவுகளாகத்தான் இருக்கும்!

நூலைப் போலச் சேலை என்பார்கள். அதுபோலவே, தாய் தந்தையர் போலவே பிள்ளைகளும் அன்புடையவர்களாகவும் பண்புடையவர்களாகவும் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களாகவும் இன்று தமிழ்க்கூறு நல்லுலகில் உலாவருதை எண்ணிப் பார்க்கும் பொழுது பெருமையாக உள்ளது.

தமிழ்ப் பள்ளி கணினி வெள்ளோட்ட நிகழ்வு 

கணினியையும் தமிழ்ச்செயலியையும் பெற்றுவிட்ட எங்கள் பள்ளி அடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெள்ளோட்டமிட வேண்டும் என்று எண்ணினோம்.

அந்த அதிகாரப்பூர்வ நிகழ்வை நம் நாட்டின் தமிழ்ப்பள்ளிக் காவலராக அக்காலகட்டத்தில் திகழ்ந்துவந்த அப்போதையப் பொதுப்பணித்துறை அமைச்சர் (மாண்புமிகு) டத்தோ(ஸ்ரீ) ச.சாமிவேலு அவர்களைக் கொண்டுதான் முன்னெடுக்க வேண்டுமென தலைமையாசிரியர் விரும்பினார்.

P.M.Murthy article photo

திரு.வீ.தங்கவேலு, டத்தோ(ஸ்ரீ) ச.சாமிவேலுவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதனால்தான், நிகழ்ச்சிக்கான தேதியை டத்தோ(ஸ்ரீ) ச.சாமிவேலுவிடம் உறுதிபடுத்துவதற்கு 6 மாதத்துக்கு மேலாகியும் (காராக்கிலிருந்து கோலாலும்பூருக்குப் பல முறை நடையாய் நடந்ததையும் அவருடைய அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்ததையும்) பெரிதுபடுத்தாமல் பொறுமையாகக் காத்திருந்தார்; தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தார். அவர் டத்தோ(ஸ்ரீ) ச.சாமிவேலுவேலுவைச் சந்திக்கச் சென்ற அத்தனை முறையும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்.

தமிழ்க்கணினி அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியை மிக விமர்சையாக நடத்திட வேண்டும் என்று தலைமையாசிரியர் விரும்பினார். அவருடைய விருப்பத்தை எங்கள் தலைமேல் சுமந்துகொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவையினரும் தோட்டத்துத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தினரும் பம்பரமாய் சுழன்று பல நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டோம்.

டத்தோ(ஸ்ரீ அவர்களையும் மற்ற பிரமுகர்களையும்  எப்படியெல்லாம் சிறப்பாகத் தோட்டத்துக்குள் அழைத்து வரலாம், எப்படி எல்லாம் வரவேற்பு நல்கலாம், மேடையில் அவருக்கு என்ன சிறப்புச் செய்யலாம், கணினி தொடக்கவிழாவைப் புதுமையாக எப்படி வெள்ளோட்டமிடலாம், மாணவர்களைக் கொண்டு என்னென்ன படைப்புகளை அரங்கேற்றலாம், நினைவுமலரை எந்தக் கோணத்தில் வெளியிடலாம் என  நாள்கணக்கில் வாரக்கணக்கில் பலவற்றைச் சிந்தித்துப் பயிற்சி செய்து ஒத்திகை பார்த்து ஒருவாறாக தொடக்க நிகழ்வுக்கு ஓர் இறுதிவடிவம் கொடுத்தோம்.

முரசு முத்தெழிலன் அவர்களும் “இது உங்கள் பள்ளியின் நிகழ்வு மட்டுமல்ல, முரசு தமிழ்ச்செயலி நிறுவனத்தின் நிகழ்வும் கூட..!” என்று சொல்லி எங்களுடன் சேர்ந்து தம் பங்கையாற்றினார். குறிப்பாக, தமிழ்க்கணினி சிறப்பு வெள்ளோட்ட (Opening Ceremony Special Effect) பகுதிக்கு அவர் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அதன் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்.

திட்டமிட்டப்படி, தமிழ்க்கணினி தொடக்கவிழா 1988ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பலகைகளாலும் தகரங்களாலுமான அந்த அரை நூற்றாண்டு பழமைவாய்ந்த தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

மேடையும் மண்டபமும் இல்லாத அந்தப் பள்ளியில் 4 வகுப்பறைகளுக்கு இடையிடயே இருந்த தடுப்புகளை அகற்றி தற்காலிக மண்டபத்தை ஏற்படுத்தினோம்.

ஒரு முனையிலிருந்த வகுப்பறை முழுவதும் மாணவர்களின் மேசைகளைப் பக்கம் பக்கமாக அடுக்கி வைத்து, அவற்றின் கால்களை இறுக்கமாகக் கட்டி, அவற்றின் மேற்பரப்பில் படுதா விரிப்புகளைப் போட்டுத்  தற்காலிக மேடையை அமைத்தோம்.

ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்று நிகழ்வாகத் தோட்டத்துத் திருவிழா போன்று மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் அந்த நிகழ்வு அரங்கேறி நிறைவு கண்டது.

முத்தெழிலனுக்கு ‘தமிழ் கணினிச் செம்மல்’ விருது

தொடக்கவிழா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக முரசு முத்தெழிலன் அவர்களுக்கு “தமிழ்க்கணினிச் செம்மல்” என்கிற விருது வழங்கப்பட்டது.

பிரதான மேடையில் டத்தோ(ஸ்ரீ) அவர்களால் பட்டுத்துணியில் பொறிக்கப்பட்ட அந்த விருதுச்சால்வை முத்தெழிலன் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. “முரசு” என்கிற தமிழ்க்கணினி செயலியை உருவாக்கி சாதனை படைத்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமையை தேடித் தந்த முத்தெழிலன் அவர்களுக்கு இந்நாட்டுத் தமிழர்களின் அனைவர் சார்பாகவும் அவிருது வழங்கப்படுவதாக மேடையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1986 தொடங்கி நான் அப்பள்ளியில் பணிபுரிந்த 1989 இறுதி வரை முரசு 6 தமிழ்ச்செயலியைப் பயன்படுத்தி அப்பள்ளியில் நிறைய வேலைகளைச் செய்து முடித்திருக்கிறேன். பள்ளியின் சுற்றறிக்கைகள், கடிதங்கள், தேர்வுத்தாள்கள், பயிற்சித்தொகுப்புகள், அறிக்கைகள், பெ.ஆ.சங்கக் கூட்டக் குறிப்புகள், அதன் ஆண்டுப் பொதுக் கூட்ட செயலறிக்கைகள், கணக்கறிக்கைகள் என நூற்றுக்கணக்கான  ஆவணங்களை முரசு தமிழ்ச்செயலியில் தயாரித்திருக்கிறேன்.

எங்கள் பள்ளியின் வேலைகள் மட்டுமின்றி மற்ற பள்ளிகளின் வேலைகளையும் எங்கள் பள்ளியின் தமிழ்க்கணினியில் செய்து கொடுத்திருக்கிறேன். தமிழ்க்கணினி நம் பள்ளியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு தங்களுக்கு உதவும்படியாக வந்து தலைமையாசிரியர் திரு.வீ.தங்கவேலு அவர்களை அணுகினால், மறுப்பேதும் கூறாமல், நேராக என்னிடம் அழைத்து வந்து “ இவருக்கு நம் தமிழ்க்கணினியில் இந்த வேலையைச் செய்து கொடுத்துதவுங்கள்” என்று கேட்டுக் கொள்வார்.

அவருடைய அந்த நல்லெண்ணத்திற்காகவும் அப்படியாவது அந்தப் பள்ளிக்குத் தமிழ்க்கணினியைப் பற்றி தெரியவரட்டுமே என்கிற என்னுடைய எண்ணதிற்காகவும் அவ்வேலைகளைச் சலிக்காமல் செய்து கொடுப்பேன்.

30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய “முரசு”டனான இந்தத் தமிழ் உறவுப் பயணம் இன்று வரையிலும் அது தொடர்வதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். இன்றுள்ள முரசு 10 மற்றும் செல்லினம் பயனீட்டாளர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1998ஆம் ஆண்டு, மலேசியக் கல்வி அமைச்சின் தேர்வு வாரியத்தில் பணிபுரியத் தொடங்கிய போது, வாரியத்துக்குத் துணைவன் தமிழ்ச்செயலியுடன் சேர்த்து முரசு தமிழ்ச் செயலியையும் அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்குண்டு. இன்று வாரியத்தின் எல்லாத் தேர்வுத்தாள்களும் முரசு அஞ்சல் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த தமிழ்ச்செயலிகளுள் ஒன்றாகத் திகழ்ந்துவரும் முரசு மேலும் பல புதிய உருவாக்கங்களையும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் சாதனைகளையும் படைத்துத் தாய்த்தமிழுக்கு மேலும் பல மகுடங்களைச் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என உளமார வாழ்த்தி விடைபெறுகிறேன்.

‘கணினி உலகையும் கன்னித் தமிழ் வெல்லட்டும்! ’

-பி.எம்.மூர்த்தி