கோலாலம்பூர், மார்ச் 14 – இன்று மாலை 7.30 மணிக்கு கோலாலம்பூரில் தொடங்கிய “இணைமதியம்” என்னும் தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக மிகப் பெரிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் கண்டது.
முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், செல்லினத்தின் புதிய பதிகையில் உள்ள தொழில் நுட்பக் கூறுகளையும் புதிய மேம்பாட்டு நுணுக்கங்களையும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன், செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கினார்.
செல்லினம் 4.0 பதிகையின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:-
அண்மைய அண்ட்ரோய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும்
இன்று உலகில் அதிகமான பயனர்கள் திறன்பேசிகளில் பயன்படுத்தும் அண்ட்ரோய்டு இயங்குதளத்தின் மிக அண்மைய வெளியீடான லோல்லிபோப் (Lollipop) என அழைக்கப்படும் அண்ட்ரோய்டு 5 (Android 5) தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு செல்லினத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அண்மைய அண்ட்ரோய்டு கருவிகளிலும் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயனர்கள் தமிழில் உள்ளிடலாம்.
சொற்களை முன்கூட்டியே பரிந்துரை செய்யும் வசதி
செல்லினத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த சொற்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வசதி தற்போது மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு ஓர் எழுத்தைத் தட்டும்போது அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களை மட்டும்தான் செல்லினம் வரிசைப்படுத்திக் கொடுக்கும். இப்போதுள்ள புதிய தொழில் நுட்பத்தில் ஒரு சொல்லை முடிக்கும் போது அந்தச் சொல்லுக்கு அடுத்து வரும் சொற்களையும் செல்லினம் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும்.
இதன் வழி, எழுதவிரும்பும் வரிகளை விரைவாகவும் பிழைகள் இல்லாமலும் கையடக்கக் கருவிகளில் உள்ளிட வாய்ப்பமையும்.
செல்லினம் 4.0 மற்றொரு புதிய அனுபவத்தையும் பயனர்களுக்குத் தரவிருக்கின்றது. ஒரு சொல்லை பிழையாக எழுதினால், அந்த சொல்லை செல்லினமே திருத்தி, சரியான சொல்லைப் பரிந்துரைக்கும். இதுவும் தானியங்கி முறையில் (Auto correction) செயல்படும்.
அதே சமயத்தில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர்கள் இருப்பின் அத்தகைய சொற்றொடர்களை பயனர்களின் சொந்த சொற்பட்டியலில் தொகுப்பாக சேமித்து வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒரு கருவியில் சேமித்து வைக்கப்படும் சொற்கள் அதே பயனரின் மற்ற கருவிகளிலும் போய் தானாகவே சேர்ந்துவிடும்.
அந்தப் பயனர் புதிதாக ஒரு கருவியை வாங்கினால், ஏற்கனவே உள்ள கருவியில் சேமித்த சொற்களையும் புதிய கருவிக்குள் செல்லினம் வழியே ஒரே பட்டனைக் கொண்டு செலுத்திவிடலாம். ஒவ்வொரு சொல்லையும் சிரமப்பட்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதுபோன்ற இன்னும் பல புதுமையான தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள செல்லினம் 4.0ஐ இன்றுமுதல் பயனர்கள் “கூகுள் பிளே” தளத்தின் வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆப்பிள் ஐஓஎசின் பதிகை இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய பதிகையின் அறிமுகம் மூலம் ஏற்கனவே தமிழ் உள்ளீட்டிற்குப் புகழ்பெற்ற செல்லினம், உலகம் முழுவதிலுமிருந்து மேலும் அதிகமான பயனர்களை ஈர்க்கும் என்றும் கையடக்கக் கருவிகளில், தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்து, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.