கோலாலம்பூர், மார்ச் 16 – மலேசிய இந்து அகாடமி அமைப்பைப் புரவலராகக் கொண்டு, அவர்களின் ஆதரவோடு, லாஸ்யா கலாலயமும், தினகரன் நுண்கலைகலைக்கழகமும் உலகத்திலேயே முதன் முதலாக ஐம்பெரும் காப்பியம் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றவுள்ளது.
இந்த நாட்டிய நாடகம் எதிர்வரும் 28 மார்ச் 2015 சனிக்கிழமை இரவு மணி 7 முதல் 10.30 வரை பிரீக்பீல்ட்ஸ் நுண்கலைக் கோயில் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி ஆகியவை தமிழ் மொழியின் ஐம்பெரும்காப்பியங்களாகும். அத்தகைய அரிய காப்பியங்களை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லவே இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் காப்பியங்கள் ஒரு பார்வை
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு இதனை அவர் இயற்றினார்.
சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரங்களான மாதவியின் மீதும், கண்ணகியின் மீதும் மற்ற கதாபாத்திரங்கள் மீதும் நமது மதிப்பு மேலோங்கும் வண்ணம் இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து மணிமேகலை எனும் காப்பியம். இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். கோவலன் மாதவி தம்பதியின் மகளான மணிமேகலையின் வாழ்க்கையை விவரிக்கின்றது இந்த காப்பியம்.
தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி, அமுதசுரபியைப் பெற்று மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் வாழ்ந்தாள் மணிமேகலை. அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள் .
சீவகசிந்தாமணி என்ற காப்பியம் சீவகன் என்னும் மன்னனின் வாழ்க்கையை விளக்குகிறது.
சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர். சீவகன் எட்டுப் பெண்களை மணம் செய்து கொண்டான். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய வாழ்வில் அடைய வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்து குண்டலகேசி. நூலின் நாயகி குண்டலகேசி செல்வ வணிகர் குலத்தில் பிறந்தவள் . அவள் ஒரு கள்வனை காதலிக்க, அவள் தந்தையோ மறுக்காமல் அவளுக்கு மணமுடித்து வைத்தார். அவனோ சில காலம் வாழ்ந்தபின் அவளைக் கொன்று நகைகளை கொள்ளையிட முனைந்தபோது, அது அறிந்த குண்டலகேசி அவனைக் கொன்றாள். கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள். இவ்வாறு காதல் மிக்க பெண்களால், வீரத்துடன் தீமையை எதிர்த்து நிற்கவும் முடியும் என்பதை குண்டலகேசி உணர்த்தும்.
ஐம்பெருங் காப்பியங்களில் மற்றொன்று வளையாபதி. இவ்விலக்கியத்தின் எஞ்சிய பகுதிகளைக் கொண்டு இந்த நாட்டியம் படைக்கப்பட்டுள்ளது.
காப்பியம் நாட்டிய நாடகத்தில் வாழ்வியல் தத்துவங்கள்
வாழ்வில் செய்யத்தக்கவற்றையும், அல்லாததால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் காப்பியங்கள் எவ்வாறு நமக்கு உணர்த்துகின்றன என்பதை ‘காப்பியம்’ நாட்டிய நாடகம் நமக்கு ரசிக்கத்தக்க வகையில் வழங்கவுள்ளது.
காப்பியம் எனும் பெயரில் படைக்கப்படவுள்ள இந்த நாட்டிய நாடகத்தில் கதாபாத்திரங்களை அழகுற சித்தரிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும், இன்றைய வாழ்வுக்கு அதன் மூலம் நாம் கொள்ளும் படிப்பினையையும் எளிதில் புரியும்படி வடிவமைத்துள்ளனர்.
இக்காப்பியங்களை எளிய பாடல் வரிகளுக்குள் செல்வி ஸ்ரீ ஷா, டாக்டர் மு. பாலதர்மலிங்கம் ஆகியோர் அமைத்துத் தந்துள்ளனர். அவருடன் இசையமைத்து, ஆடற்காட்சிகளை நடன அமைப்பு செய்துள்ளார் மதுர நாட்டியமாமணி ஸ்ரீமதி குருவாயூர் உஷா.
இவ்வரங்கேற்றத்தில் முத்தாய்ப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து திரு பீனிக்ஸ்தாசன் இயற்றி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் தினம், அன்னையர் தினம் ஆகியவை கொண்டாடப்படும் இந்த காலகட்டத்தில் இப்பாத்திரப்படைப்புகள் மூலம் அந்தக் காலப் பெண்களின் வீரம், தியாகம், வைராக்கியம், பொறுமை ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதனை கண்டு களித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காப்பிய நாட்டிய நாடகத்திற்கு முன்னோட்டமாக, நிகழ்ச்சிக்கு முதல் நாள் 27 மார்ச் காலை 8 முதல் மாலை 5.30 வரை கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில், பல்வேறு உலக நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற காப்பியம் மாநாட்டு ஆய்வேடுகள் படைக்கப்படுகின்றன.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
மாநாட்டு கட்டுரை படைப்பு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது.
ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள கல்வியமைச்சு கடிதத்தை மாநில கல்வி இலாகாவிடம் பெற்றுக் கொள்ளலாம் என உலகத் தமிழ் காப்பியம் மாநாடு 2015 ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தினகரன் நுண்கலை திரு. தனேசு பாலகிருட்டிணன் கூறினார்.
மேல் விவரங்களுக்கு:
திருமதி கௌரி இராமநாதன் 011-18523211
திருமதி குருவாயூர் உஷா துரை 0123237434
திரு தனேசு பாலகிருட்டிணன் +6011-2356 5930 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.