இலண்டன், மார்ச் 19 – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” என்றார். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பல ஆண்டுகள் சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது.
அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், காந்தியை “அரை நிர்வாணப் பக்கிரி” என வர்ணித்தார்.
ஆனால், இன்றோ, காந்தியை அந்த அரை நிர்வாணக் கோலத்திலேயே – அதுவும் தனது நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலேயே – முழு சிலையாக நிர்மாணித்து அழகு பார்த்து மரியாதை செலுத்தியிருக்கின்றது இன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம்.
பிரிட்டிஷ் பிரதமரே முன்னின்று இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி மத்திய இலண்டன் பகுதியில் உள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட 9 அடி உயர வெண்கலச் சிலை இதுதான். இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த சிலையைத் திறந்து வைத்தார்.
1931ஆம் ஆண்டில் இலண்டனுக்கு இந்திய சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த, எண்; 10, டவுனிங் சாலையில்பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்த காந்தி அந்த இல்லத்தின் முன் நிற்பது போல எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் சிற்பி பிலிப் ஜேக்சன் (Philip Jackson) இந்த சிலையைச் செதுக்கியுள்ளார்.
மகாத்மா காந்தியின் சிலை அருண் ஜெட்லியால் திறந்து வைக்கப்படுகின்றது.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் சிலை திறந்து வைக்கப்படுவதை கண்காணிக்கின்றனர்.
மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ணா காந்தி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் காந்தி சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்று உரையாற்றுகின்றார்.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபல இந்திய நடிகர் அமிதாப் பச்சன் வருகை தந்தவர்களுக்கு வணக்கம் கூறுகின்றார்.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அமிதாப் பச்சன்…
படங்கள்: EPA