துபாய், மார்ச் 17 – உலக அளவில் மக்கள் தொகைக்கு ஏற்ப கார்களின் பயன்பாட்டைக் கொண்டுள்ள நகரங்களில் துபாய் முன்னிலை வகிக்கிறது. கார்கள் கணக்கெடுப்பு பற்றிய விவரங்களைக் மேற்கொள்ளும் எஸ்டிபி எனும் நிறுவனம், முக்கிய நகரங்களில் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பெரு நகரங்களான நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கை விட துபாயில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் ஆயிரம் பேருக்கு 305 கார்களும்”,
“இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள் ஆயிரம் பேருக்கு 213 கார்களும் சொந்தமாக உள்ள நிலையில், துபாயில் வசிக்கும் மக்களில் சராசரியாக ஆயிரம் பேருக்கு சொந்தமாக 540 கார்கள் உள்ளன”.
‘மொத்தம் 24 லட்சம் மக்கள் தொகையை கொண்ட துபாயில் 14 லட்சம் கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாயில் கடந்த எட்டே ஆண்டுகளில் கார்களின் பயன்பாடு இருமடங்கு அதிகமாகி இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்நிலை, தொடர்ந்தால் வரும் 2020-ம் ஆண்டுக்குள் துபாயில் ஓடும் கார்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.