Home நாடு “கட்டாயப்படுத்தினால் தான் நஜிப் பதவி விலகுவார்” – மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் கருத்து

“கட்டாயப்படுத்தினால் தான் நஜிப் பதவி விலகுவார்” – மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் கருத்து

540
0
SHARE
Ad

kadir_jasinகோலாலம்பூர், மார்ச் 18 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கட்டாயப்படுத்தி பதவி இறக்கினால் தவிர, அவர் தானாக பதவி விலகமாட்டார் என மூத்த செய்தியாளரான ஏ.காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

“நஜிப் தனது போக்கை மாற்றிக்கொள்வார் அல்லது பதவி விலகுவார் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எண்ணிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவர் அப்துல்லா படாவியைப் போல் தானாக பதவி விலகுபவர் அல்ல” என்றும் காதிர் ஜாசின் கூறியுள்ளார்.

நஜிப் தானாக பதவி விலகுவார் என காத்திருக்கும் மகாதீர், துங்கு ரசாலி, டாயிம் ஜைனுடின் போன்றவர்கள் நிச்சயம் ஏமாந்து தான் போவார்கள் என்று குறிப்பிட்டுள்ள காதிர், இவ்வாறு கூறுவதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் காதிர் தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:-

““1மலேசியா மேம்பாட்டு  நிறுவனம், பெம்பாங்குனான்  பிஎப்ஐ  சென்டிரியான் பெர்ஹாட், எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென்டிரியான் பெர்ஹாட் மற்றும் சைருல் ஆஸ்திரேலியாவுக்குத்  தப்பி யோடியது  போன்ற விவகாரங்களை முன்னிருத்தி நஜிப்பை கட்டாயமாக பதவி விலகச் சொல்ல வேண்டும்”

“முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியை போல் நஜிப்பை எண்ண முடியாது. காரணம் படாவி தனது வட்டத்தில் சிறிய அளவிலான ஆதரவாளர்களை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் நஜிப்புக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர். அதனால் நஜிப்பை அம்னோ தலைவர் பதவியில் இருந்து இறக்குவது கடினம்.”

“நஜிப்பை தனது போக்கை மாற்றிக் கொள்ள இயலாத அளவிற்கு அவரை சுற்றி துதி பாடுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். எனவே படாவியை பதவி இறக்கியதை போல் நஜிப்பை பதவி இறக்குவது எளிதல்ல என்பதை அவரை குறை கூறுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்”

“1எம்டிபி மற்றும் சர்ச்சைக்குரிய மற்ற விவகாரங்களும் விஸ்வரூபமெடுத்தாலும், அம்னோவைப் பொறுத்தவரை நஜிப் பலமாக இருக்கின்றார். கடந்த மார்ச் 8-ம் தேதி, அடிமட்ட தலைவர்கள் ஒன்று  திரண்டு  அவருக்கு  ஆதரவு  தெரிவித்ததே  அதற்கு சான்று” இவ்வாறு காதிர் ஜாசின் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 1எம்டிபி உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நஜிப்புக்கு எதிராக அம்னோவில் பல தலைவர்கள் போர்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

2018க்குள் நடைபெறவிருக்கும் அடுத்த 14வது பொதுத் தேர்தலை புதிய அம்னோ தலைவர் தலைமையேற்று நடத்த வேண்டும் என்ற நோக்கிலும் அதற்கு முன்னோடியாக தன்னையும் தனது கொள்கைகள், திட்டங்கள் என்ன என்பது குறித்து புதிய தலைவர் வியூகங்கள் வகுப்பதற்கு ஏதுவாகவும், இந்த ஆண்டிலேயே தலைமைத்துவ மாற்றம் நடைபெற வேண்டும் என்றும் அம்னோவில் ஒரு சில தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.