டுனிஸ், மார்ச் 19 – துனிசியா நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் இருவர், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 17 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவின் தலைநகர் டுனிஸில் உள்ள புகழ்பெற்ற பார்டோ அருங்காட்சியகத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிக அளவில் இருந்தது.
அப்பொழுது, இராணுவ சீருடையில் நவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் உட்பட 21 பேர் பலியாகினர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ‘அரபு வசந்தம்’ (Arab Spring) என்ற போராட்டக்குழு இந்த சதிச் செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில், சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டின் பிரதமர் ஹபிப் எசிட் கூறுகையில், “தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. அவர்களுக்கு நாம் எந்தவிதத்திலும் கருணை காட்டப்போவதில்லை. நாட்டின் பாதுகாப்பில் அவர்களுடன் எந்த சமரசமும் செய்யப்போவதுமில்லை” என்று கூறியுள்ளார்.