பெய்ஜிங், மார்ச் 20 – சீனாவில் இணையத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், போட்டி நிறுவனங்களின் வரவு போன்ற காரணங்களால் யாஹூ நிறுவனம் சீனாவில் இருந்த தனது கடைசி ஆய்வு மையத்தையும் மூடியது. இதன் காரணமாக சுமார் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு இணைய நிறுவனமான யாஹூ, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் தனது ஆய்வு மையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
டுவிட்டர் நிறுவனம் ஹாங் காங்கில் தனது அலுவலகத்தை திறந்துள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனமும் சீனாவில் தனது கிளைகளை தொடங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இது போன்ற மற்ற முன்னணி நிறுவனங்கள், சீனாவில் தங்கள் கிளைகளை திறப்பதற்கு போராடி வரும் நிலையில், யாஹூவின் இந்த முடிவு அந்நிறுவனங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக யாஹூ நிறுவனம் கூறியுள்ளதாவது:-
“எங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், புதுமையை புகுத்தி கூடுதலான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளது.
யாஹூ தனது மையத்தை மூடுவதால், எத்தனை பேர் வேலை வாய்ப்புகளை இழக்க இருக்கின்றனர் என்பது பற்றி அந்நிறுவனம் எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என்றாலும், பெய்ஜிங் ஆய்வாளர்களின் ஆய்வுகளின் படி சுமார் 200-300 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு, சீனாவில் தனது மின்னஞ்சல் சேவையினை நிறுத்திய யாஹூ நிறுவனம், தற்போது தனது ஆய்வு மையத்தையும் மூட இருப்பதால், சீனாவுடனான யாஹூவின் வர்த்தகம் முற்றிலும் தடைபட உள்ளது.