Home நாடு மஇகா: சங்கப் பதிவக உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை ஏப்ரல் 2இல்!

மஇகா: சங்கப் பதிவக உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை ஏப்ரல் 2இல்!

434
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 20 – மஇகா தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கில், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், சங்கப் பதிவகத்தின் சார்பில் வாதாடிய அரசாங்க வழக்கறிஞர் சமர்ப்பித்த பூர்வாங்க ஆட்சேபங்களை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

MIC-logoஇதனைத் தொடர்ந்து சங்கப் பதிவகத்தின் முடிவுகளை சீராய்வு செய்யும் மனுக்களை (Judicial Review) ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என்ற முடிவையும் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் செய்துள்ளார்.

விசாரணை தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு நடந்து முடியும்வரை சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை செயல்படுத்தக் கூடாது என பழனிவேல் தரப்பினர் கோரியுள்ள தடையுத்தரவு மீதிலான விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும்.

சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவுகள், அவர்கள் வழங்கியுள்ள கடிதங்கள், ஆகியவை சங்கங்களின் சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது குறித்து இனி விசாரணை செய்து நீதிமன்றம் முடிவு செய்யும்.

இரண்டு வழக்குகள் நீதிமன்ற முன்னிலையில்

தற்போது இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தின் முன் விசாரணையில் இருக்கின்றன. இரண்டுமே சங்கப் பதிவகத்தின் முடிவுகள் செல்லாது என நீதிமன்றத்தை அறிவிக்கக் கோரும் வழக்குகளாகும்.

Palanivel-Feature---3ஒரு வழக்கை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் ஆகியோர் கூட்டாகத் தொடுத்துள்ளனர்.

மற்றொரு வழக்கை, மஇகா பத்து தொகுதி தலைவரான ஏ.கே.இராமலிங்கம் தொடுத்துள்ளார்.

சங்கப் பதிவகத்தின் முடிவுகளை மறு ஆய்வு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை செயல்படுத்தக்கூடாது என்ற வாதிகளின் தடையுத்தரவு மீதிலான விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.

ஒருபுறத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்கவில்லையென்றால், அந்த உத்தரவுகளை சங்கப் பதிவகம் செயல்படுத்தக் கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்பதால், இதுபோன்ற தடையுத்தரவுகள் கோருவது நீதிமன்ற நடைமுறையில் வழக்கமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில், வழக்கு நடந்து முடியும்வரை நீதிமன்றம் சங்கப் பதிவகத்தின் முடிவுகளை செயல்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடையுத்தரவை ஏப்ரல் 2ஆம் தேதி விசாரணைக்குப் பின் நீதிமன்றம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த முடிவுகள் எல்லாம் இடைக்கால முடிவுகளே அன்றி, இரண்டு தரப்புக்கும் வழக்கின் இறுதி வெற்றியை நிர்ணயம் செய்யப்போகும் முடிவுகளல்ல.

முழுவழக்கையும் விசாரித்த பின்னர் – இரண்டு தரப்பினரின் முழு விவாதங்களையும் செவிமெடுத்த பின்னர்தான் – உயர் நீதிமன்றம் சங்கப் பதிவகத்தின் முடிவுகள் சட்டத்திற்குட்பட்டவைதானா,  என்பது குறித்த தீர்ப்பை வழங்கும்.

அதன்பின்னர் அந்த முடிவின் மீது திருப்தி இல்லையென்றால், சங்கப் பதிவகமோ, பழனிவேல் தரப்பினரோ மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம்.

இந்த வழக்குகளின் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கிளைத் தேர்தல்களும், மே மாதம் நடைபெறவிருக்கும் தேசியத் தலைவருக்கான தேர்தலும் மேலும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கின்றது.

சிக்கலான இந்த வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகளும், மேல் முறையீடுகளும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் முடிவுறுமா என்பது சந்தேகமே!

-இரா.முத்தரசன்