கோலாலம்பூர், மார்ச் 20 – வழக்கத்திற்கு மாறாக நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஒன்று கூடி, பிரதமர் நஜிப்பிற்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம் என ஆதரவுப் பிரகடனம் ஒன்றை செய்திருப்பது மலேசிய அரசியல் அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.
நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு இது என்பதை விட, அவரது தலைமைத்துவம் எந்த அளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்றது என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுவதாக இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது.
காரணம், எப்போதுமே தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான நஜிப்பிற்கு ஆதரவாகத்தான் எல்லா உறுப்புக் கட்சித் தலைவர்களும் செயல்பட்டு வந்திருக்கின்றார்கள்.
அம்னோவில் நஜிப்பிற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்குதலைத் தணிக்கும் விதமாகவும், திசை திருப்பும் விதமாகவும் இந்த வியூகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.
சரிந்து வரும் நஜிப்பின் ஆதரவைத் தூக்கி நிறுத்த முடியுமா?
ஆனால், இத்தகைய ஆதரவுப் பிரகடனம் மூலம் சரிந்து வரும் நஜிப்பின் மதிப்பைத் தூக்கி நிறுத்திவிட முடியாது.
காரணம், நஜிப்பிற்கு எதிரான தலைமைத்துவப் போராட்டம் ஏற்பட்டிருப்பதும், மையம் கொண்டிருப்பதும் அம்னோவில்தானே தவிர, தேசிய முன்னணியில் அல்ல!
எப்போதுமே, அம்னோவில் தலைமைத்துவ நெருக்கடி ஏற்படும் போதும், தலைவருக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும்போதும், எடுத்த எடுப்பில் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக அறிவிப்பு செய்வார்கள்.
ஆனால், பின்னர், அம்னோவில் அரங்கேறும் தலைமைத்துவ போராட்டங்களையோ, மாற்றங்களையோ அமைதியாக, ஓரத்தில் இருந்து கண்காணித்து வருவார்களே தவிர, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சித் தலைவர்கள் எப்போதுமே அம்னோ அரசியலில் தலையிடவும் மாட்டார்கள் – தங்களின் கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்கவும் மாட்டார்கள்.
அம்னோ போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து, யார் புதிய தலைவராக மகுடம் சூட்டப் படுகின்றார்களோ, அவருக்கு உடனேயே தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதைத்தான் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் இதுவரைத் தங்களின் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, நாளை நஜிப் வீழ்த்தப்பட்டு, மொய்தீன் யாசின் புதிய தலைவராக வந்தால், உடனடியாக நேற்று நஜிப்புக்கு ஆதரவுப் பிரகடனத்தை முழங்கிய அத்தனை தலைவர்களும், அதே போன்ற ஆதரவுப் பிரகடனத்தை அடுத்த கணமே மொய்தீனுக்கும் வழங்குவார்கள்.
எனவே, இப்போது தனக்கு எதிராக அம்னோவில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை பல முனைகளிலும் சமாளிக்க நஜிப் வியூகம் வகுத்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் செயல்படுத்தியிருக்கும் வியூகங்களுள் ஒன்றுதான் தேசிய முன்னணித் தலைவர்களின் ஆதரவுப் பிரகடனம்.
இன்றைக்கு தனது மகளின் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நஜிப், அந்த மன நிறைவோடு, தனது அரசியல் நிலைமையை மேலும் வலுவாக்கிக் கொள்ள இன்னும் கூடுதலாக தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மொய்தீன் என்ன செய்யப் போகின்றார்?
அம்னோவினர், அடுத்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் மற்றொரு முக்கியத் திருமணம், துணைப் பிரதமர் மொய்தீன் யாசினின் மகளது திருமணம்.
அபூர்வமாக, நஜிப், மொய்தீன் இருவரின் மகள்களின் பெயரும் நஜ்வா என்பதாகும்.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தனது மகளின் திருமணத்தை முடித்துக்கொண்டுதான் அரசியலில் அடுத்த கட்ட காய் நகர்த்தலை மொய்தீன் மேற்கொள்வார் என அம்னோ அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இதனால், அம்னோவில் நஜிப்புக்கு எதிரான போராட்டம் ஏப்ரல் மாதத்தில் மேலும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்னோவில் நிகழப்போகும் அரசியல் சம்பவங்களை வைத்து – தலைமைத்துவ மாற்றத்தை வைத்துத்தான் – தேசிய முன்னணித் தலைவர்கள் தங்களின் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்குமே தவிர,
தேசிய முன்னணித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், அம்னோவில் எழுந்திருக்கும் தலைமைத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் குரல் எந்த விதத்திலும் குறையப் போவதில்லை.
-இரா.முத்தரசன்