Home நாடு “உறுப்பினர் தகுதியை இழந்து விட்ட பழனிவேல் என்னை எப்படி நீக்க முடியும்?” – டி.மோகன் கேள்வி!

“உறுப்பினர் தகுதியை இழந்து விட்ட பழனிவேல் என்னை எப்படி நீக்க முடியும்?” – டி.மோகன் கேள்வி!

791
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 21 – மஇகா சட்டவிதிகளின்படி மஇகா தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றதால், பழனிவேல் தனது உறுப்பியத்தை இழந்து விட்டார் என்றும் அதன் காரணமாகத் தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்) கூறியுள்ளார்.

T.mohanபழனிவேல் தனக்கு அனுப்பியுள்ள மார்ச் 18 தேதியிட்ட கடிதத்தில் மஇகா சட்டவிதிகளின் பிரிவு 61.1இன்படி தனக்குள்ள தேசியத் தலைவருக்கான அதிகாரத்தின் கீழ் தன்னை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என மோகன் மேலும் தெரிவித்தார்.

“அதே கடிதத்தில் தனக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளையும் பழனிவேல் முன் வைத்துள்ளார். ஆனால் அவற்றுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் பொய்யானவை, சிருஷ்டிக்கப்பட்டவை என்பதை நிரூபிக்க நான் விரைவில் காவல் துறையில் புகார் செய்வேன்” என்றும் மோகன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

6 பிப்ரவரி 2015 தேதியிட்ட கடிதத்தின்படி தேசியத் தலைவர் உள்ளிட்ட கட்சியின் எல்லாப் பதவிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த சங்கப் பதிவகம் உத்தரவிட்டுள்ளதால் அவருக்கு தேசியத் தலைவருக்குரிய அதிகாரம் தற்போது இல்லை என்பதையும் மோகன் சுட்டிக் காட்டினார்.

மஇகா சட்டவிதி 91வது பிரிவு 

MIC Logo 298 x 295“இந்த நேரத்தில் மற்றொன்றையும் பழனிவேலுவுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். மஇகா சட்டவிதிகளின் 91வது பிரிவின்படி அவர் மஇகா விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதால் தனது உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டார் என்பதோடு அதன் காரணமாக தேசியத் தலைவருக்கான அதிகாரங்களையும் இயல்பாகவே இழந்துவிட்டார்” என்றும் தனது அறிக்கையில் மோகன் தெரிவித்துள்ளார்.

மஇகா சட்டவிதிகள் 91வது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது:-

Article 91 of the MIC Constitution states:

‘Every member shall be bound by the decision of the CWC in matters relating to rights, obligations, duties and privileges as a member of the Congress. If he resorts to court proceedings in respect of his rights, obligations, duties and privileges or on behalf of any other member or in respect of the rendering or meaning of the provisions of this Constitution without first referring to the CWC or in violation of any decision or directives of the CWC he shall ipso facto cease to be a member of the Congress and shall not be entitled to exercise any of the rights of a member ‘

“இந்த சட்டவிதியின்படி ஒவ்வொரு உறுப்பினரும் மத்திய செயலவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர் என்பதோடு, மஇகா குறித்த விவகாரங்களை மத்திய செயலவையின் ஒப்புதல் இன்றி அல்லது முதலில் மத்திய செயலவையின் பார்வைக்குக் கொண்டு வராமல் நீதிமன்றம் கொண்டு சென்றால் அவர் உடனடியாக காங்கிரசிலிருந்து தனது உறுப்பியத்தை இழந்து விடுவார், அதற்குப் பின்னர் அவர் உறுப்பினருக்கான எந்தவித உரிமைகளையும் செயல்படுத்த முடியாது” எனத் தெளிவாகக் குறிப்பிடுவதாகவும் மோகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“பழனிவேல் மேலும் நால்வரோடு இணைந்து, சங்கப் பதிவகம் மஇகாவுக்கு விடுத்திருக்கும் உத்தரவுகளுக்கு எதிராக சீராய்வு மனுவை, மத்திய செயலவையின் பார்வைக்கோ, அனுமதிக்கோ கொண்டுவராமல் உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். சங்கப் பதிவகம் வழங்கியுள்ள கடிதத்தில் 2013 கட்சித் தேர்தலில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றன என தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தல் குழுத் தலைவராக பழனிவேல் பணியாற்றினார் என்பதுடன் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் கூறியவர்களில் நானும் ஒருவன்” என்றார் மோகன்.

“தகாத நோக்கத்துடன் நான் நீக்கப்பட்டுள்ளேன்” – மோகன்

இதனால் அவர் தகாத நோக்கத்துடன் என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் என்பதோடு தனது அதிகாரங்களை மீறி செயல்பட்டிருக்கின்றார் என்பதும் தெளிவாகியுள்ளது என்ற மோகன், மஇகா சட்டவிதிகளின்படி அவர் இயல்பாகவே தனது உறுப்பியத்தை இழந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் ஒரே அதிகாரபூர்வ மத்திய செயலவை 2009இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைதான் என்றும் கட்சியின் எந்தவித நடவடிக்கையும் அந்த மத்திய செயலவையின் அனுமதியோடும், கலந்தாலோசனையோடும்தான் நடைபெற வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளார் மோகன்.

எனவே, பழனிவேல் தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் தான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் மஇகாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தனது முயற்சிகளைக் கைவிடாது தனது போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் மோகன் சூளுரைத்துள்ளார்.

இதுபோன்ற கோமாளித்தனமாக செய்கைகளை விட்டுவிட்டு, உண்மையான விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சங்கப் பதிவக உத்தரவுகளின்படி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கும்படி பழனிவேலுவைக் கேட்டுக் கொள்வதாகவும் மோகன் கூறினார்.

“பழனிவேலுவின் இத்தகைய தோல்விகரமான நடவடிக்கைகளால் எல்லோரும் நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலைமை உருவாகிவிட்டது. இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை இனியும் தொடர வேண்டாம். இதுவெல்லாம் நேரத்தை வீணடிப்பதாகும்” என்றும் மோகன் வலியுறுத்தியுள்ளார்.