Home இந்தியா வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை – கருப்பு பண மசோதா நாடாளுமன்றத்தில்...

வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை – கருப்பு பண மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

713
0
SHARE
Ad

black-moneyபுதுடெல்லி, மார்ச் 21 – கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண தடுப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை, ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பு பணத்தை தடுக்கும் முக்கிய மசோதாவை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

‘கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் மசோதா, 2015‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவும், 30 சதவீத வரியும் 90 சதவீத அபராதம் விதிக்கவும் வழி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இது நிறைவேற்றப்பட்டு சட்டமானால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்படி, கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்களுக்கு தனியாக வரி விதிக்கப்படும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கருப்பு பண தடுப்பு மசோதா குறித்து அடுத்த கூட்டத் தொடரின்போது விவாதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது”.

“இதனால், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் எடுத்து, வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படும் நிதி, தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்”.

“பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். சர்வதேச அளவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒரு வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில், இந்தியாதான் முன்னிலையில் உள்ளது.“ என்றார்.