உத்திரபிரதேசம், மார்ச் 21 – உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஜய் குத்தியா உறுதி செய்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில், “ரயில் விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.