கோலாலம்பூர், மார்ச் 21 – மே 1-ம் தேதி முதல் மாஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக கிறிஸ்டோபர் முல்லர் செயல்படுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக கடுமையான வர்த்தக சரிவுகளை சந்தித்த மாஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நிகழ்ந்த இரு பெரும் விமான பேரிடர்களால், மிகக் கடுமையான அளவில் பாதிப்பிற்குள்ளானது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜவ்ஹாரி யாஹ்ய பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அந்நிறுவனத்தின் மீள் நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக இல்லை.
இந்நிலையில், பெரும் இழப்பீடுகளை சரி செய்ய பெரும்பான்மையான பங்குகளை வகித்த கஸானா நிறுவனம், மாஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. அதன் முதற்கட்டமாகவே கிறிஸ்டோபர் முல்லரின் தேர்வு நடைபெற்றது.
மாஸ்-ஐ புதிய நிறுவனமாக உருமாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் கஸானா, சுமார் 6000 மாஸ் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கின்றது. இதற்கான 3 மாத முன்னறிவிப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் மாஸ் நிறுவனத்தில் இருந்து புதிய நிர்வாகத்திற்கு தேவைப்படும் தொழிலாளர்களும் இடமாறுதல் செய்யப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற 12 அம்ச மீள் நடவடிக்கைகளை செய்வதற்கு தயாராகி வரும் கஸானா, எவ்வாறாயினும், ஜூலை 1-ம் தேதி புதிய நிர்வாகத்தை இயக்கம் என்று அந்நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.