சென்னை, மார்ச் 23 – சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ குவான் யூ மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், சிங்கப்பூர் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே வியந்து பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது”.
“ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீ குவான் யூ. பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீ குவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்”.
“இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்”.
“சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால் தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீ குவான் மட்டும்தான்”.
“தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களும்,
நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீ குவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீ குவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்” என வைகோ தனது இரங்களைத் தெரிவித்தார்.