Home இந்தியா “பேரறிஞர் அண்ணாவுக்கு வரவேற்பளித்தவர்” – நினைவு கூர்ந்து கலைஞர் லீ குவான் இயூவிற்கு இரங்கல்

“பேரறிஞர் அண்ணாவுக்கு வரவேற்பளித்தவர்” – நினைவு கூர்ந்து கலைஞர் லீ குவான் இயூவிற்கு இரங்கல்

986
0
SHARE
Ad

Singaporean Minister Mentor Lee Kuan Yewசென்னை, மார்ச் 23 – மறைந்த சிங்கை நாட்டின் சிற்பியான லீ குவான் இயூவுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். தமது இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

“சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமராக 1959ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட லீ குவான் யூ 31 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டின் முடி சூடா மன்னராக விளங்கி, நவீன சிங்கப்பூருக்கான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திய பெருமகன் ஆவார்.”

“வெறும் துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூர் இவரது ஆட்சிக் காலத்திலே தான் உலகமே பிரமித்திடும் வகையில் மிகப் பெரும் வர்த்தக நகரமாக மாறியது. ஆங்கில அரசிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கும், மலேசியா விலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக இருப்பதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் தான் லீ குவான் யூ அவர்கள். உண்மையில் சுதந்திரச் சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவரே லீ குவான் யூ அவர்கள் தான்.”

#TamilSchoolmychoice

“சிங்கப்பூரில் தமிழர்கள், சீனர்கள், மலேசியர்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்றவர் இவர். தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ அவர்களே தான்.”

Lee Kuan Yew with Anna

பேரறிஞர் அண்ணாவுடன் லீ குவான் இயூ (படம் அனுப்பியவர்; வாசகர் கே.ஆர்.அன்பழகன்)

“பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்தபோது, பிரதமர் லீ குவான் யூ, தன்னுடைய அமைச்சர் பெருமக்களோடு உற்சாகமான வரவேற்பளித்ததோடு, அறிஞர் அண்ணா அவர்களின் பேருரையைக் கேட்டு ஆனந்தமடைந்த நிகழ்வு என் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கிறது.”

karunanithi“ஈழத் தமிழர்கள்பால் பேரன்பு கொண்டிருந்த லீ குவான் யூ அவர்கள் ஈழத் தமிழர்கள் மிகப் பெரும் உழைப்பாளிகள்; அவர்கள் தமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைவார்கள் என்று மனம் திறந்து குறிப்பிட்டதை உலகத் தமிழர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.

சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய நாயகனாக வாழ்ந்து, சிங்கப்பூர் மக்களின் தந்தையாகத் திகழ்ந்த லீ குவான் யூ அவர்களின் மறைவினால் வாடும் சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக அவருடைய குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் வாழும் அவருடைய நண்பர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

-இவ்வாறு கலைஞர் தமது இரங்கல் உரையில் குறிப்பிட்டுள்ளார்.