கோலாலம்பூர், மார்ச் 23 – வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் விலை குறையும் என சுங்கத்துறை தலைமைச் செயலர் டத்தோஸ்ரீ கசாலி அகமட் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களுக்கான விற்பனை வரி 10 விழுக்காடாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஜி.எஸ்.சி., வரிவிகிதம் 6 விழுக்காடு தான் என சுட்டிக் காட்டினார். வாகனங்களுக்கான விற்பனை வரி ஏப்ரல் 1 முதல் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
ஏற்கெனவே வாகனங்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை எப்படி விலை குறைத்து விற்க முடியும் என கார் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளது குறித்து கசாலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “மார்ச் 31ஆம் தேதிக்குள் வாகனங்கள் விற்கப்படவில்லை என்பதற்கும், அவற்றுக்கு விற்பனை வரி செலுத்தப்பட்டதற்கும் உரிய ஆதாரங்களைக் காட்டும் பட்சத்தில் விற்பனை வரியை சுங்கத்துறை திருப்பியளிக்கும்,” என்றார்.
இதற்கிடையே சிலாங்கூர் கார் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கூ கா ஜின், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின்னர் கார்களின் விலை 2 அல்லது 3 விழுக்காடு குறையக்கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம் வாகனங்களுக்கான பல பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாலும் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்திருப்பதாலும் வாகன விலை சற்றே ஏற்றம் காண வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.