ஜோகூர் பாரு, மார்ச் 24 – சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் நவீன ஜோகூர் மாநிலத்தின் 5ஆவது சுல்தானாக அரியணையில் அமரும் நிகழ்வு திங்கட்கிழமை வண்ணமயமான விழாவாக அரங்கேறியது.
இதையடுத்து நவீன ஜோகூரின் பட்டத்து அரசியாக அவரின் துணைவியார் ராஜா சரித் சோஃபியா முடி சூட்டப்பட்டார்.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்புதான் இதேபோன்ற அரியணையில் அமரும் விழா ஜோகூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளிலும், மேலும் டிவி3 மூலமும் நேரலையாக ஒலி, ஒளிபரப்பப்பட்டது.
தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தது ஒருபுறமிருக்க, டத்தாரான் பண்டாராயா முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் காட்டப்பட்ட நேரடிக் காட்சிகளை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர்.
அரியணையில் அமரும் விழாவுக்கு சுல்தான் இப்ராகிமின் தாயார், அவரது மூத்த சகோதரி மற்றும் இளைய சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர். சுல்தான் இப்ராகிமின் பிள்ளைகளும் இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.