வாஷிங்டன், மார்ச் 23 – மறைந்த லீ குவான் இயூவின் சாதனைகளை நினைவுகூர்ந்து உலகெங்கிலும் இருந்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
“சிங்கப்பூரின் வழிகாட்டும் அமைச்சர் லீ குவான் இயூ மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அமெரிக்க மக்களின் சார்பாகவும், எனது மனைவி மிச்சல் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை லீ-யின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, தனித்துவமிக்க இந்த மனிதரின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிங்கப்பூர் மக்களின் துயரத்திலும் பங்கு கொள்கின்றேன்” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
“1965ஆம் ஆண்டில் தனிநாடாக சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரை தூரநோக்கு சிந்தனையோடு வழிநடத்தி, அந்நாட்டை உலகின் வளம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றிய அவர் தியாக உணர்வுடைய அரசு சேவையாளர். ஒரு மாபெரும் தலைவர்” என ஒபாமா தனது இரங்கலுரையில் புகழாரம் சூட்டினார்.
“ஆசியாவின் நிலவரங்கள் குறித்தும், பொருளாதார நிர்வாகம் குறித்தும், அவர் கூறிய கருத்துகளும், உள்ளார்ந்த சிந்தனைகளும் உலகம் எங்கிலும் பலரால் மதிக்கப்பட்டன. உலகத் தலைவர்களில் பலர் கடந்த காலங்களில், அரசு நிர்வாகம், வளர்ச்சி குறித்து இவரது ஆலோசனைகளைப் பெற்று, அவற்றைப் பின்பற்றி பலன் அடைந்துள்ளனர். 2009இல் நான் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது, அவருடனான எனது கருத்துப் பரிமாற்றங்களின்போது, அவரது அறிவாற்றலை நேரடியாகக் கண்டு நானே வியந்து மதித்திருக்கின்றேன். அவர் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் எங்களின் அரசியல் அணுகுமுறையையும், கொள்கையையும் நாங்கள் பெருமளவில் மாற்றிக் கொள்ள அவரது ஆலோசனைகள் முக்கியப் பங்காற்றியது” என்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.
ஆசிய நிலவரங்களில் மிகப் பெரிய வியூகவாதிகளில் ஒருவராகவும், நவீன சிங்கப்பூரின் தந்தையாகவும் ஒரு பிரம்மாண்டமான வரலாற்று நாயகராக -அடுத்து வரும் பல தலைமுறைகள் நினைவில் கொள்ளப்போகும் மனிதராக லீ குவான் இயூ திகழ்வார்” என்றும் ஒபாமா பாராட்டுரை வழங்கியுள்ளார்.