Home நாடு மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 2) – தமிழ்மணி கண்ணோட்டம்!

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 2) – தமிழ்மணி கண்ணோட்டம்!

647
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 24 – (மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) என்ற தலைப்பில் நேற்று செல்லியலில் இடம் பெற்ற பெரு.அ.தமிழ்மணியின் கண்ணோட்டத்தின் இரண்டாம் பாகம் இது) 

எம்.ஐ.இ.டி கல்வி வாரியத்தில் மொத்தம் 61 உறுப்பினர்கள். இவர்களில் (கெடா டத்தோ சரவணன், நெகிரி டத்தோ இராஜகோபாலு) இருவர் மறைவையொட்டி எஞ்சியிருப்பது 59 உறுப்பினர்கள். இவர்கள் அனைவருமே ம இ காவின் இந்நாள் முன்னாள் தலைவர்களே!

இந்த உறுப்பினர்களிலிருந்துதான் டேப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட பல்கலைக்கழகம், இரண்டையும் நிர்வகிக்கும் வாரியங்களிலும் மற்றும் அவற்றை பராமரிக்கும் துணை நிறுவனங்களிலும் பலர் இயக்குனர்களாக இருந்து வருகிறார்கள். எம்ஐஇடி ஒரு பொது நிறுவனமாக இயங்குவதால், அந்நிறுவனத்தில் யாருக்கும் எந்த வகையான உரிமைப் பங்குகளும் கிடையாது.

#TamilSchoolmychoice

அதாவது எம்ஐஇடிக்கு பங்குதாரர்களோ, உரிமையாளர்களோ கிடையாது. அதனால், இதில் இடம் பெற்றுள்ள எந்த நபரும் நிறுவனத்தின் மீது உரிமை கோரவும் முடியாது.

அதாவது இதன் கீழ் உள்ள சொத்துகளை யாரும் கபளீகரமோ களவாடுதலோ செய்திட முடியாது.அதேவேளை இவ்வாரிய உறுப்பினர்கள் கூடி வாரியத்தலைவர் முதல் வாரிய உறுப்பினர்கள் வரை மாற்றி அமைக்கவும் முடியும்.Tamil Mani

அத்தகைய கட்டமைப்பைப் பெற்று உள்ளதனால் இது தொடர்ந்து மஇகாவின் சொத்தாக இருந்து வரும். இந்த கட்டமைப்புக்கு மாற்றமாக – மாறுதலாக – பழனி சிந்திக்க முடிந்தால் நல்லதுதான்.

இன்றைக்கு இந்த எம்ஐஇடி சம்பந்தப்பட்டவற்றை மஇகாவின் சொத்தாக்கும் வரை உறங்கப்போவதில்லை என்ற சபதத்தில் இறங்கியிருக்கும் பழனி 1994 முதல் 2011வரை எம்ஐஇடி வாரியத்தின் துணைத்தலைவராக இருந்ததோடு இன்றும் எம்ஐஇடி-யின் உறுப்பினராகவும் இருந்து வருபவர்தானே?

எனவே, அவருக்குத் தெரியாமல், அவரது பார்வைக்குப் போகாமல், எம்ஐஇடி-யின் எந்த சொத்தையும் மாற்றவோ, விற்கவோ முடியாது.

அதே வேளை கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் விட்டதே? இப்படி பல பதவிகளில் சம்மணம் போட்டு ஐந்து ஆண்டுகளாக உட்கார்ந்து இருந்து விட்டு, இப்போது திடீரென ம இ கா சொத்தை மீட்கப்போகிறேன் என்று முழக்கம் விடுகிறார் என்றால் மீண்டும் தேசியத் தலைவர் பதவியை அடைகாத்துக் கொள்வதற்கான நாடகமாகத்தான்  அது இருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி!

ஒப்பீட்டுப் பார்த்தும் என்ன பாதகம் சாதகம்?

எனவே! எனது இரண்டு வகையான பார்வைக்குள்ளும் நடைமுறை சாத்தியங்கள் – நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக கருதப்படும் எதிர்விளைவுகள் குறித்து – அறிவுப்பூர்வமாக மட்டுமல்ல! ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய நிலைக்கு ம இ கா உறுப்பினர்களை பலி பீடத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்! ம இ கா சொத்து என்றால் உறுப்பினர் நிலை கட்சியில் நீடிக்கிற வரை! போராட்டம் தொடரவே செய்யும். அதற்கு அடிப்படை கட்சியில் அவர்கள். நேரடியாக உறுப்பினர்களாக சம்பந்தப்பட்டிருக்கிற காரணமே!

ஆனால் இதில் கட்சி நேரடியாக இல்லாமல் இன்னொரு நிறுவனத்தின் மூலம் ஈடுபடுகின்ற கல்வி பொருளாதாரத் திட்டங்களில் ம இ கா உறுப்பினர்கள் தனித் தனியாக உரிமை கோர முடியாது. எப்படி எம் ஐ இ டி யில் உறுப்பினர் என்ற நிலைப்பாட்டில் 59 பேர் இருந்தாலும் அவர்கள் எப்படி பங்குதாரர்கள் என்ற உரிமையை கோர முடியாதோ, அதே போன்றுதான்    ம இ கா உறுப்பினர்களின் நிலைப்பாடும்!

அதனால்தான் எம் ஐ இ டி யின் சொத்துக்களையெல்லாம் ஆறு லட்ச உறுப்பினர்களுக்கு எழுதி வைக்கப்போவதாக அறிவித்திருக்கிற அறிவிப்பானது வெறும் பித்தலாட்டமானது. அதுவோர் அரசியல் நாடகம் என்பதை ம இ காவினர் புரிந்து கொள்ளவேண்டும்!

ம இ காவின் உரிமையை இழக்கக்கூடாது.!

MIC Building with Palanivel

எனவே! எம் ஐ இ டி யில் புதைந்து போயிருக்கிற சொத்துக்கள் குறித்து தனி தனி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பங்குரிமை கோர முடியாது என்பது நடைமுறை சிக்கல் என்றாலும் –

ம இ காவின் திட்டம் என்பதாலும் ம இ காவால் . கட்டமைக்கப்பட்டதாலும் ம இ கா மூலமாக அரசு மானியம் பெறப்பட்டதாலும். ம இகா உறுப்பினர்களின் பணமும் உழைப்பும் பயன்பட்டுள்ளதாலும் ம இ காவின். பிரதிநிதிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டதாலும்,

யாருக்கும் எந்த தனிநபருக்கும். இதில் சொந்தம் கொண்டாட இடமளிக்காமல் பாதுக்காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ம இ காவுக்கு உண்டு. அதற்காக பழனி போன்று பொறுப்பைத் தட்டிப் கழித்துவிட்டு ,ஓடி போய்விடவும் முடியாது.

எனவே! ம இ காவினர்களால் நடத்தப்படும் எம் ஐ இ டி என்றைக்கும் ம இ காவின் சொத்தாகத்தான் இருக்கும்! இருக்கவேண்டும்.

அதில் ம இ கா தலைமைத்துவம் வலுவாக உறுதிக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமே!

அடமானத்தில் ம இ கா வா?

அதனால் இத்தகைய சர்ச்சைகளுக்கிடையே சில அறிவாளிகள் பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். அதில் ஒன்று! கல்வியை இலவசமாக வழங்க வேண்டுமாம்.

இதில் நமக்கு மாறுபாடு இல்லையென்றாலும். எப்படி இலவசக் கல்வியை வழங்க முடியும்?

ம இ காவுக்கு இருக்கிற சொத்துகளை வைத்து, நமது மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்க வேண்டுமாம்! எப்படி இது சாத்தியப்படும்?   ம இ காவின் சொத்து என்றால் அதனுடைய பெயரில் அதாவது அறங்காவலர்களின் பெயரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அதனுடைய கட்டிடங்கள், நிலங்கள் என்ற வகையறாக்களைத் தவிர வேறு ஏதும் சொத்து இருக்கிறதா?

சரி இதை வைத்து எப்படி இலவசமாக கல்வியை வழங்க முடியும்? இலவசமாக கல்வியை வழங்க வேண்டுமானால் ம இ கா சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைக்கவேண்டிதானே வரும்? சரி கல்விக்காக அடமானம் வைக்கிறோம் என்றால் அந்த சொத்துகளை எப்படி அடுத்து மீட்கப்போகிறோம்?

மாணவர்களுக்கு இலவசமான கல்வி என்றால் அவர்களிடம் எந்த.கட்டணமும் வாங்கக்கூடாது என்பதுதானே சரி? அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கு எந்த வருமானமும் வரவில்லையென்றால் எப்படி, பட்ட கடனை வங்கிக்கு செலுத்த முடியும்? இலவச கல்வி என்ற பெயரில் ம இ கா சொத்துக்களை அடமானம் வைத்து மாணவர்களை படிக்க வைத்துவிட்டு,     ம இ காவை முழுமையாக மூழ்கடிக்கலாமா?

இப்படிப்பட்ட ஆலோசனைகளை எப்படி கொஞ்சமும் முன்யோசனையில்லாமல் முன் வைக்கின்றனர் என்பதுதான் நமது கேள்வி?

இன்று அரசாங்கமே பிடிபிடிஎன் எனும் பெயரில் கடனைக் கொடுத்து விட்டு அல்லல் படும் கதை புரியவில்லையா? தெரியவில்லையா என்ன?

எனவே இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு! ம இ காவின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபாடுடையது என்பதை; ஆலோசனை வழங்கும் நல்லோர் எண்ணிப்பார்ப்பது நல்லது. எனவே ம இ காவின் உண்மையான சொத்துக்களுக்கு என்ன விலை? அந்த சொத்துக்களில் எவையெவை வங்கிகளில் அடமான கணக்கில் இதுவரை சிக்கியிருக்கின்றன? வங்கிக்கும் கட்சிக்குமான கடன்தொடர்பு நிலை இப்போது எப்படியிருக்கிறது என்பது போன்ற விபரமெல்லாம் முற்றாக அறிந்துக்கொள்ளாமலேயே சொத்தை மூழ்கடிப்பதற்கு ஆலோசனை தருகிற இந்த மகா அறிவாளிகளை எங்கே வைப்பது? எப்படி வைப்பது? என்று ம இ காஉறுப்பினர்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறோம்.

எம் ஐ இ டியின் சொத்துக்களுக்கு ஆபத்தா?

ம இ கா பெயரில் நேரடியாக உள்ள சொத்துக்களின் நிலைப்பாடு ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தாலும் அடுத்து எம் ஐ இ டியின் கீழ் உள்ள சொத்துக்களை குறித்துதான் இன்றைய சொத்து மீட்பு விவகாரம் எழுப்பப்படுகிறது.

அதற்கு காரணம், அதன் துணைத் தலைவராக இருந்து வந்த பழனி 2011ல் விலகிக்கொண்டார். 2010 டிசம்பரில் கட்சியின் இடைக்கால தேசியத் தலைவரானதும் அவர் எம் ஐ இ டியின் துணைத்தலைவர் பதவியை தூக்கியெறிகிறார்.

அப்படியிருந்தும் இன்னும் அவர் அவ்வாரியத்தில் உறுப்பினர்தான்.sothinathan

அதேபோல டத்தோ சோதிநாதனும் எம் ஐ இ டி யின் உறுப்பினர்தான். அதேவேளையில் எம் ஐ இ டி -யின் துணை நிறுவனமான எம் ஐ இ டி கேப்பிட்டல் சென். பெர்ஹாட்டில் இயக்குனராகவும் அதேவேளை இன்று வரை காசோலைகளில் கையெழுத்திடுபவராகவும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம் ஐ இ டி குறித்து கேள்வி எழுப்புவதற்கு காரணம் ம இ காவில் ஏற்பபட்டுள்ள பிளவுதான்.

இது வழக்கமான தமிழரின் பண்பாட்டுத் தாக்கத்தின் வெளிப்பாடுதான்! அதாவது  தங்களுக்குள் பிளவு வராதவரை அனைத்தையும் ஜீரணித்துக்கொள்வது, பின்னர் பிளவு என்று ஒன்று வந்து விட்டால் விழுங்கியதை அப்படியே வாந்தி எடுத்துவிடுவது!

அதற்கு பழனிவேல் – சாமிவேலு தொடர்பை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே!

இந்த இருவருக்கும் இல்லாத உறவா? இல்லாத கீழறுப்பா? கடந்த இருபதாண்டு காலமாக. இந்த இருவரும் சேர்ந்து வகுக்காத சதித்திட்டம் வேறு ஏதும்.இருக்கா என்ன?

அதாவது பழனி துணைத் தலைவராக இருக்கும் போது ஒரு நாடகம்! துணைத்தலைவரான அவர் தலைவரானதும் ஒரு நாடகம்! பழனி இருபது ஆண்டுகளாக சாமிக்கு அடங்கியவராக இருந்தவரை மகா யோக்கியர்!

இன்று அடங்கி நடக்காததால் பரம அயோக்கியர்! பழனி கடந்த இருபது ஆண்டுகளாக சாமியே சரணம் என்றார்! இன்று அதே சாமிக்கு பழனி கரணமாகிவிட்டார்!

எனவே இப்படிப்பட்ட மனோபாவத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் எந்த குற்றச்சாட்டிற்கும் எப்போதும் வலுவான பின்னணியிருக்க வாய்ப்பே இல்லை! அதனால் ம இ காவுக்கு 300 கோடி இருப்பதாகவும் அதை கபளீகரம் செய்ய ஒரு திருட்டுக்கூட்டம் முயல்வதாகவும் அதை தடுத்து நிறுத்த இன்னோரு உத்தமர் கூட்டம் புறப்பட்டுள்ளதாகவும் ஓர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். அது எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதுதான் நமது கேளவி?

எங்கே அந்த 300 கோடி சொத்து?

DSC_0043_1759அதாவது எம் ஐ இ டி-யின் கீழ் இருக்கிற பெரிய சொத்துகள் இரண்டு! ஒன்று கெடா ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்! மற்றது சிரம்பான் டேப் கல்லூரி! இந்த இரண்டுக்கும் நிலம் கட்டடங்கள் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் உரிய நிலத்தை கெடா – நெகிரி மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டவையாகும்!

அதன்பின் அரசு மானியங்கள் கட்சியினர் மூலம் திரட்டப்பட்ட பணம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டதுதான், இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும்.

இவற்றிற்கு இன்னும் வங்கியில் பெறப்பட்ட பல மில்லியனுக்கு கடன் செலுத்தும் நடைமுறையும் தற்போது வரை இருந்துதான் வருகிறது.

முதலில் இவை. இரண்டையும் கடன் இல்லா நிறுவனங்களாக மாற்றி அமைக்க வேண்டும். அதேவேளை தரமுள்ள கல்வி நிறுவனங்களாக தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும்.. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்திலும் வெற்றிபெற வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமானால் அதற்குரிய திட்டங்களும் மேம்பாட்டிற்குரிய அடைவு நிலைகளிலும் முழுமையான வெற்றியை அடைய வேண்டயுள்ளது.

அதேவேளை காலத்திற்கு ஏற்பவும் கல்வியில் எதிர்ப்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் அந்த கல்வி நிறுவனங்களில் பல்வேறு கட்டமைப்புகளைச் செய்தாக வேண்டும். இதற்கெல்லாம் பணம் தேவைப்படவே செய்யும். அதாவது தொடராக ஒரு கல்வி நிறுவனத்தின் மேம்பாடு என்பது ஓர் எல்லைக்குள் முடிவதில்லை. முடியப் போவதுமில்லை. அதனால் சிறுசிறு தவறுகளோடு நடைபெற்றாலும்.பெரிய தவறுகளால் இதுவரை கவிழ்ந்து விடாமல் நிலைத்து நின்றிருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தையும் டேப் கல்லூரியையும் ஒரேயடியாக முடித்துக் கட்டுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுவற்காகவே இன்றைக்கு 300 கோடி பிரகடனத்தை கையில் தூக்கியுள்ளார்கள் பழனியின் குத்தாட்டப் பேர்வழிகள்!

ஆகவே கணக்கு வழக்குகள் இப்படியிருக்கும் போது எங்கிருந்து வந்தது 300 கோடி சொத்து எம் ஐ இ டிக்கு? காலத்திற்கு ஏற்ப நிலமதிப்பீடு மட்டுமே ஓரளவு உயருமேயொழிய காலத்திற்குக் காலம் கட்டிட கட்டமைப்புக்குரிய விலை குறைந்துகொண்டேதான் வரும் என்கிற விபரத்தைக் கூடவா சரியாக கணக்கிட முடியாமல் போய்விட்டார்கள்.

அதேவேளை இயந்திரம் சம்பந்தப்பட்ட பொருள்களின் தேய்மானம் வேறு!

சாமானியமாகக் கணக்கிட்டாலே 100-150 கோடிக்கு (1500 மில்லியன்) கூட மதிப்பிட முடியாத இவ்விரண்டு கல்வி நிறுவனங்களையும் 300 கோடிக்கு மதிப்பிட்ட அந்த உலகப் புகழ் பெற்ற சொத்து மதிபீட்டாளரை தேடிக்  கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

எனவே அரசியலில் யாரும் எதைவேண்டுமானாலும் கையில் எடுத்துக்குக்கொண்டு காயை நகர்த்துவார்கள் என்பதற்கு இந்த 300 கோடி சொத்து விவகாரமே ஓர் எடுத்துக்காட்டாகும் என்பதை ம இ காவினர் மட்டுமல்ல! நடுநிலையாளர்களும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதே எனது சுயவிருப்பத்தின் விண்ணப்பம்!!

– பெரு .அ.தமிழ்மணி

(பின்குறிப்பு:  மஇகா  சொத்துகள் குறித்து எழுந்திருக்கும் சர்ச்சையைத் தொடர்ந்து,  மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம் இது. இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com