வாஷிங்டன், மார்ச் 26 – அமெரிக்காவில் புகழ்பெற்ற வெல்வீட்டா சீஸ் தயாரிப்பாளரான கிராஃப்ட் உணவு குழுமமும், தக்காளி சுவையூட்டிகளுக்கு பேர்பெற்ற ஹென்ஸ் (Heinz) நிறுவனமும் இணைந்து, சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான உலக உணவு நிறுவனம் ஒன்றை உருவாக்க முடிவுசெய்துள்ளன.
ஆசிய நாடுகளை விட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்துள்ள கிராஃப்ட் நிறுவனம், சீஸ் மற்றும் காப்பி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை உலகம் முழுவதும் செய்து வருகின்றது.
அதேபோல் அமெரிக்காவின் பெரு வர்த்தகரான வாரன் பஃபெட்டினால் நிறுவப்பட்ட ‘பேர்க்ஷயர் ஹாதவே’ (Berkshire Hathaway) நிறுவனத்துக்கும், பிரேஸில் நாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனமான ‘3ஜி கெப்பிட்டல்’ (3G Capital) நிறுவனத்துக்கும் சொந்தமானது தான் ஹென்ஸ் நிறுவனம்.
இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து உலகம் முழுவதும் உணவு மற்றும் குடிபானங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றன. இந்த புதிய கூட்டு முயற்சியே, அமெரிக்காவின் உணவு மற்றும் குடிபான தொழில்துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உருவெடுக்க வைத்துள்ளது.
இந்த புதிய கூட்டு நிறுவனத்தில் ஹென்ஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், கிராஃப்ட் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் வைத்திருப்பதாக அந்நிறுவனங்களின் வட்டாரங்கள் கூறுகின்றன.