Home இந்தியா வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: நாளை நேரில் வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி!

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: நாளை நேரில் வழங்குகிறார் பிரணாப் முகர்ஜி!

537
0
SHARE
Ad

vajpayeeபுதுடெல்லி, மார்ச் 26 – நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வழங்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேரில் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட மிக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல், விடுதலைப் போராட்ட வீரரும், கல்வி அறிஞருமான மறைந்த மதன் மோகன் மாளவியாவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது, குடியரசுத் தலைவர் மாளிகையில் 30-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாளவியாவின் குடும்பத்தினரிடம் அளிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “டெல்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்தில் 27-ஆம் தேதியன்று, அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார்”.

“இதேபோல், குடியரசுத் தலைவர் மாளிகையில் 30-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், பத்ம விருதுகளுடன் சேர்த்து, பண்டிதர் மதன் மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அளிக்கவுள்ளார்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியமைந்த பிறகு, அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

bharat-ratna-1இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதேபோல், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவருமான மாளவியாவுக்கும், டிசம்பர் 24-ஆம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்பட 45 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அப்போது, மூத்த அரசியல் தலைவர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்காததற்கு, காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியது.