கோலாலம்பூர், மார்ச் 27 – உலகில் முதல் முறையாக “காப்பியங்களில் அறிவியல் கோட்பாடும், சமுதாயச் சிந்தனை வெளிப்பாடு” என்ற கருப்பொருளில் ‘உலகத் தமிழ் காப்பியம் மாநாடு 2015′ இன்று மார்ச் 27-ம் தேதி, காலை 8 மணி தொடங்கி மாலை 5 வரை, கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தன் கட்டிடத்தில் உள்ள சோமா அரங்கில் நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டை லாஸ்யா கலாலயமும், தினகரன் நுண்கலை கலாலயமும் இணைந்து நடத்துகின்றது. இந்நிகழ்வினை டத்தின்ஸ்ரீ உத்தாமா இந்திராணி சாமிவேலு அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கின்றார்.
இம்மாட்டில் இந்தியா, மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்து கட்டுரையாளர்கள் சுமார் 30 கட்டுரைகள் வரை படைக்கப்படவிருக்கின்றனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும், தமிழ் ஆர்வலர்களும் இம்மாட்டில் கலந்து கொண்டு பயனடயுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து நாளை காப்பியம் நாட்டிய நாடகமும் நடைபெறவுள்ளது.
இந்த நாட்டிய நாடகம் நாளை 28 மார்ச் 2015 சனிக்கிழமை இரவு மணி 7 முதல் 10.30 வரை பிரீக்பீல்ட்ஸ் நுண்கலைக் கோயில் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி ஆகியவை தமிழ் மொழியின் ஐம்பெரும்காப்பியங்களாகும். அத்தகைய அரிய காப்பியங்களை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லவே இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.