திருவனந்தபுரம், மார்ச் 27 – கேரளாவில் ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகை பிடிக்கவும், மது அருந்தவும் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி பலர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, கனரக வாகனங்களை செலுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அரசு ஊழியர்கள் தங்களின் பணி நேரத்தின்போது புகை பிடிக்கவோ, மது அருந்தவோ தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறும் அரசு ஊழியர்கள் முதல் இரண்டு முறை பிடிபட்டால் 15 நாள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அதன் பின்னரும் அந்த ஊழியர் அதே தவறை மூன்றாவது முறையும் தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்படுவார்.
இதுதொடர்பாக அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது எல்லா அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி இன்று கூறினார்.