கோலாலம்பூர், மார்ச் 27 – பிரதமர் நஜிப்பின் கனவுத் திட்டமாக தொடங்கப்பட்டு இன்று பில்லியன் கணக்கான கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம், குறித்த புதுப் புது அதிர்ச்சித் தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணமிருக்கின்றன.
அதிலும் சில விவகாரங்கள், சாதாரண பொதுமக்களுக்கு புரியாத அளவுக்கு – ஏன் நன்கு படித்தவர்களுக்கே புரியாத அளவுக்கு சிக்கலான விவகாரங்களாக இருக்கின்றன.
காரணம், இதில் சம்பந்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரிங்கிட் முதலீடுகள் – அதோடு உயர்மட்ட வங்கி, நிதித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய நுணுக்கமான நிதி மற்றும் கணக்கு விவகார அம்சங்கள்.
அவ்வாறு வெடித்துப் புறப்பட்டிருக்கும் மற்றொரு விவகாரம் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் 1எம்டிபிக்கும் இடையிலான வழக்கத்திற்கு மாறான – அளவுக்கதிகமான – சேவைக்கட்டண பரிமாற்றங்கள் (கமிஷன்).
கோல்ட்மேன் சாச்ஸ் என்பது மிகப்பெரிய நிதிகளையும், கடன்களையும் நிறுவனங்களுக்குப் பெற்றுத் தரும் அல்லது நிர்வகிக்கும் ஓர் நிதி ஆலோசனை நிபுணத்துவ நிறுவனம்.
1869இல் அமெரிக்காவில் மார்க்கஸ் கோல்ட்மேன் (Marcus Goldman) சாமுவெல் சாச்ஸ் (Samuel Sachs) என்ற இருவரால், அவர்களின் பெயர்களின் ஒரு பகுதியாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலகளாவிய நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மலேசியாவிலும் இந்நிறுவனம் அலுவலகத்தைக் கொண்டிருக்கின்றது.
கூடுதலான சேவைக் கட்டணம் வழங்கப்பட்டதா?
1எம்டிபி நிறுவனம் 2009ஆம் ஆண்டில் 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இஸ்லாமியக் கடன் பத்திரங்களை (Islamic Bonds) வெளியிட்டபோது அதற்கான நிதி ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டது கோல்ட்மேன் சாச்ஸ். இதற்காக 5.75 விழுக்காடு சேவைக் கட்டணத்தை அது விதித்திருக்கின்றது.
அதாவது, ஏறத்தாழ 287 மில்லியன் ரிங்கிட் சேவைக்கட்டணமாக மட்டும் இந்நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், சந்தையில் இதைவிட குறைந்த அளவுக்கு சேவைக் கட்டணம் பெற்றுக்கொண்டு இதே அளவுக்கான நிபுணத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன – அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு அளவுக்கதிகமாக இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இதே போன்றதொரு கடன்பத்திரத்தை பெட்ரோனாஸ் வெளியிட்டபோது 3.6 சதவீத சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கின்றது என்றும் சுட்டிக் காட்டப்பட்டப்பட்டிருக்கின்றது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு வழங்கிய பதிலில் பிரதமர் நஜிப், இதுபோன்ற பெரிய கடன் பத்திர விநியோகத்தை நிர்வகிக்கும் நிபுணத்துவ ஆற்றல் கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனத்திற்கு மட்டுமே உள்ளது என்பதால்தான் இவ்வளவு பெரிய கடன்பத்திர நிர்வாகத்தை மேற்கொள்ள அந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்பட்டது என விளக்கியிருக்கின்றார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களும் கோல்ட்மேன் சாச்ஸ் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்விக் கணைகளை பிரதமர் நஜிப்பிற்கு எதிராகவும், 1எம்டிபி நிறுவனத்திற்கு எதிராகவும் தொடுத்து வருகின்றனர்.