கோலாலம்பூர், மார்ச் 28 – அரசாங்கம் எத்தனை தடை விதித்தாலும் அறிவிக்கப்பட்ட படி இன்று மாலை 4 மணியளவில் மிகப் பெரிய அளவிலான கித்தா லவான் பேரணி நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கித்தா லவான் செயலாளர் கூறுகையில், “மக்கள் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை. அதனால் மலேசியர்கள் நாம் தான் ஏதாவது ஒன்றை செய்து அரசாங்கத்திற்கு அதை உணர்த்த வேண்டும். அதனால் தான் பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு எதிராக நாமே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று கித்தா லவான் செயலகம் சார்பில் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் கோலாலம்பூர் சோகோ வணிக வளாகத்தின் முன்பு தொடங்கும் இந்தப் பேரணி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகள் திருமண வரவேற்பு நடைபெறும் கேஎல்சிசி கட்டிடம் வரை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 7-ம் தேதி, நடத்தப்பட்ட ‘கிட்ட லவான்’ பேரணியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இப்பேரணி அதைவிட அதிகமானோர் கலந்து கொள்ளும் பேரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக மட்டுமின்றி, ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரியை) எதிர்த்தும் பேரணி நடைபெறவுள்ளது.