சிங்கப்பூர், மார்ச் 29 – நினைவு தெரிந்து அண்மையக் காலத்தில் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு உலகத் தலைவருக்காகவும் – அதுவும் இருபதாண்டுகளுக்கு முன்பே தனது பதவியைத் துறந்து விட்ட ஓரு முன்னாள் பிரதமருக்கு – இத்தனை நாடுகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
லீ குவான் இயூவின் புகைப்படத்தை ஏந்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டு வந்தபோது…
ஆம், இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மைய மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்த நிலையில் – நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் பத்து முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி உரைகளை ஆற்றிய வேளையில் உலகின் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்து அந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றார்கள்.
அவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், புருணையின் ஆட்சியாளர் சுல்தான் ஹாசானால் போல்கியா, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், கம்போடிய பிரதமர் ஹன் சென், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இஸ்ரேலிய அதிபர் ரேவன் ரிவ்லின், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் அடங்குவர்.
லீ குவான் இயூவின் நல்லுடல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றது
இந்த இறுதி அஞ்சலி சடங்குகளில் மலேசிய மாமன்னர் அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, கசக்ஸ்தான் பிரதமர் கரிம் மாசிமோவ், லாவோஸ் பிரதமர் தோங்சிங் தம்மாவோங், மியன்மார் அதிபர் யு தெய்ன் செய்ன், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ஜெர்ரி மாட்பெரே, பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற மேல்சபை தலைவர் பிராங்க்ளின் டிரிலோன், சீனா துணை அதிபர் லி யுவான்சாவ், தென் கொரியா அதிபர் பார்க் கியூன் ஹாய், கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹாமாட் அல் தானி, ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் இகோர், ஷூவாலோவ், தாய்லாந்து பிரதமர் பிராயுட் சான்-ஓ-சா, வியட்னாம் பிரதமர் ங்குயென் தான் டங், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரும் நாடாளுமன்ற கீழ் சபையின் தலைவருமான வில்லியம் ஹேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரின் முக்கிய நட்புறவு நாடான அமெரிக்கா லீ குவான் இயூவிற்கு மரியாதை தரும் பொருட்டு, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான குழுவை இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுப்பியுள்ளது.
இத்தனை உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது சிங்கப்பூருக்கு அந்தத் தலைவர்கள் தரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், லீ குவான் இயூ மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் கௌரவத்தையும் உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.
லீ குவான் இயூவின் நல்லுடல் இராணுவ மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் காட்சி
படங்கள்: EPA