மாஸ்கோ, மார்ச் 30 – கடந்த வருடத்திற்கு முன்பு வரை, உலக நிறுவனங்கள் பலவற்றிற்கு பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஷ்யா, இன்று மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளால் பொருளாதார சீரழிவை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் உலக நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில்,
சமீபத்தில் பிரஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ‘பியூஜியோட் சிட்ரோயன்’ (Peugeot Citroen) மற்றும் ஜப்பான் நிறுவனமான ‘மிட்சுபிஷி’ (Mitsubishi) ஆகியவை ரஷ்யாவில் தங்கள் தயாரிப்பினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.
2014-ம் ஆண்டிற்கு முன்பு வரை வழக்கத்தை விட ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிக லாபம் ஈட்டி வந்த ரஷ்யாவின் தானியங்கி மோட்டார் வர்த்தக துறை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்குப் பிறகு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இது தொடர்பாக பியூஜியோட் சிட்ரோயன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரு வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார சரிவு, எங்களை இந்த முடிவிற்கு தள்ளி உள்ளது” என்று அறிவித்துள்ளது.
மிட்சுபிஷி நிறுவனமும் பொருளாதார சரிவினை சுட்டிக் காட்டி தங்கள் தயாரிப்பினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்நிய நிறுவனங்களின் விலகல் ரஷ்ய பொருளாதாரத்தில் மேலும் தொய்வை ஏற்படுத்தினாலும்,
மீண்டும் எழுச்சி பெரும் பொழுது, ரஷ்யாவில் அந்நாட்டின் சொந்த நிறுவனங்களே பெருவாரியான வர்த்தகத்தை ஆக்கிரமித்து இருக்கும் என்பது அந்நாட்டிற்கு சாதகமான ஒன்று என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.