புதுடெல்லி, மார்ச் 31 – உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற பெருமை பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளதாம். அக்கட்சியில் 8.80 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.
பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்பேசிகளில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது.
அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அக்கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முதல் இடத்துக்கு வந்துள்ளதாம்.
பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையுடன் முடிவடையும் நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்து விடும் என்று கூற்பபடுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனராம்.