சனா, மார்ச் 31 – ஏமன் நாட்டில் போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. முகாமில் தஞ்சம் அடைந்திருந்த அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகினர்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா கடந்த 25-ம் தேதி முதல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. இதில் கிளர்ச்சியாளர்களில் ஏராளமானோர் பலியாகினர்.
மேலும், கடந்த 3 நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்திய சவூதி அரேபியா, போராளிகள், பொதுமக்கள் என்று பாராமல் பலரை கொன்று குவித்து வருகின்றது.
தொடர்ந்துவரும் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏமன் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அல் மஸ்ரக் நகரில் ஹவுத்தி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விமானப்படை தளத்தை கைப்பற்ற சவுதி விமானப் படைகள் நேற்று ஆவேச தாக்குதல் நடத்தின. போர் விமானங்கள் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில், ஐ.நா. அகதிகள் முகாம் பாதிக்கப்பட்டது.
இதில் 21 அப்பாவி மக்கள் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த மக்கள் பலியான சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.