Home அவசியம் படிக்க வேண்டியவை சுதந்திரத்திற்கு முந்தைய-பிந்தைய அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் – ஹிண்ட்ராஃப்

சுதந்திரத்திற்கு முந்தைய-பிந்தைய அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் – ஹிண்ட்ராஃப்

1778
0
SHARE
Ad

waytha-moorthyகோலாலம்பூர், மார்ச் 31 – கடந்த நூற்றாண்டில் 1940, 50-ஆம் ஆண்டுகளில் நாடு அடுத்தடுத்து அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டது. அந்த வகையில், மெர்டேக்காவுக்கு முன்னும் பின்னும், குறிப்பாக 1946 முதல் மலாயா, மலேசியாவாக மலர்ச்சி கண்ட 1963-ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் அரசுக்கும் மலாயா அரசுக்கும் இடையே பரிமாற்றம் கண்ட அனைத்து ஆவணங்களையும் அம்னோ தலைமையிலான அரசு ஒளிவு மறைவு இன்றி வெளியிட வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொண்டுள்ளது.

வரலாற்று நூல்களின்வழி மத்தியக் கூட்டரசு வெளியிடும் தகவலுக்கும் உண்மைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. உண்மையில், மலேசிய மண்ணின் எதிர்கால தலைமுறையினருக்கு உண்மையை மறைப்பது பாவம் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி இலண்டனிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தனது அறிக்கையில் வேதமூர்த்தி கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராஃப் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், மலேசிய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள பல ஷரத்துகளின் சட்டப்பூர்வத் தன்மைக் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பேரரசியால் நியமிக்கப்பட்ட ‘சுயேச்சை ரீட் அரசியலைப்பு ஆணையம்’ மலேசியாவிற்கான அரசியல் சட்டத்தை வரைந்தது.”

“அவற்றில் இருந்து ஏராளமான் ஷரத்துகள், வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன; அல்லது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன; திருத்தி அமைக்கப்பட்டுள்ளன; அல்லது முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. 1950 ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டில் பிரிட்டிஷ் அரசுதான் கையொப்பமிட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை தொடர்பான பன்னாடு பிரகடத்தை வரைந்ததிலும் பிரிட்டிஷிற்கு பெரும் பங்குண்டு.”

“இருந்தும், மலேசியாவிற்கான அரசியல் சட்டத்தை வரைந்தபோது, மனித உரிமையை நிலை நாட்டுவது குறித்து தனக்குரிய கடப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் நழுவிக் கொண்டது.தீபகற்ப மலேசியாவில் மலாய் சமுகத்தில் உள்ள சில பிரிவினருக்கான சிறப்பு சலுகையை ஹிண்ட்ராஃப் எதிர்க்கவில்லை. மலாயாவின் சில தலைவர்கள் முன் வைத்த இந்தப் பரிந்துரைக்கு பிரிட்டிஷ் அரசியாரும் இசைவு தெரிவித்துள்ளார்.”

“மலாய் ஆட்சியாளர்களும் தங்களுக்குள்ள சிறப்பு நிலை தொடர வேண்டும் என்பதில் ‘பங்கோர் ஒப்பந்தம்’ கையொப்பமிடப்பட்ட நாளில் இருந்தே குறியாக இருக்கின்றனர்.தீபகற்ப மலேசியாவில் வாழும் அனைத்து மலாயரும் பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு கல்வி, தொழில், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வகையாலும் முன்னுரிமை அளிக்கப்படுவதை அனைத்துத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.”

“அதேவேளை, தோட்டப் புறங்களில் நலிந்த நிலையில் நசிந்து வாழும் இந்தியத் தொழிலாளர்களும் பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதப்படவில்லை என்பதை,
குறிப்பாக அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பிரிட்டிஷ் இதுபற்றி கொஞ்சமும் சிந்திக்க வில்லை என்பதை ஹிண்ட்ராஃப் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.”

“இத்தகைய சிறப்புச் சலுகையை சுதந்திர மலாயாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும் நடைமுறைப் படுத்துவது என்று துங்கு அப்துல் ரஹ்மான், ரீட் அரசியல் அமைப்பு ஆணையத்திடம் முன்னதாக ஒப்புக் கொண்டார்.அதன் அடிப்டையில் மலாயா அரசியல் சாசனம் முழுமை படுத்தப்பட்டு பிரிட்டிஷ் அரசியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரும், மலாய் சிறப்புரிமைப் பற்றி கூடுதலான அம்சங்களை ரீட் அரசியல் அமைப்பு ஆணையம் பரிந்துரைத்தது.”

“இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர், துங்கு அப்துல் ரகுமானும் மலாயாவில் இருந்த பிரிட்டிஷ உயர் ஆணையரும் இணைந்து ஒரு செயற்குழுவை அமைத்து அதன்வழி, ரீட் அரசியல் அமைப்பு ஆணையம் உறுதி செய்த மலாயா அரசியல் சாசனத்தின் விதிகளில் மாற்றம் செய்தனர்; திருத்தி அமைத்தனர்; மாற்றி எழுதினர்.”

“இதன் மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை, அரசியல் சாசன விதி 4(3)-இன்வழி மாற்றி அமைத்தனர். மலாயாக் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் சாசன விதி 8-யையும், அனைவருக்கும் கல்வியில் சம உரிமை வழங்க வகை செய்த சாசன விதி 12-ஐயும் மாற்றி மாற்றி அமைத்தனர். இதேப் பாணியில்தான், துங்கு அப்துல் ரகுமான் மலாயாவிற்கான பிரிட்டிஷ் ஆணையருடன் கமுக்கமான உறவு வைத்து கொண்டு, கதவிற்குப் பின்னால் அநேகத் திட்டங்களை நிறைவேற்றினார்.”

“அந்த வகையில்தான், போர்னியோ மாநிலங்களும் மாலாயாவுடன் இணைக்கப்பட்டன. இன்றைய மலேசிய அரசு வரலாற்றுத் தகவலை மாற்றி மாற்றி, உண்மைக்கு திரை போட்டு வருவதைப் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. சபாவும் சரவாக்கும் மலேசியாவின் காலனிப் பிரதேசங்களாகி வருகின்றன. வழக்கத்திற்கு மாறாக இன முறுகல், சமய முறுகல், சமூக முறுகல் நிலையெல்லாம் ஆங்காங்கே செயற்கையாக தோற்றுவிக்கப்படுகின்றன.”

“குறிப்பாக, சமய தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பகடைக்காய்களாக அரசு பயன்படுத்திக் கொள்ள இனியும் முடியாது. காரணம், மலேசிய மக்கள் அரசியலிலும் சமூகவியலிலும் இன்னும் சொல்லப் போனால் சமய சிந்தனையிலும்கூட விசாலமானப் பார்வையைக் கொண்டுள்ளனர். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கின்றனர். இந்த நிலை எதிர்கால மலேசியக் கட்டமைப்புக்கு வலு சேர்க்கும்.”

“மொத்தத்தில் இன்றைய ஆட்சியாளர்களின் யுக்தி எடுபடாது” என்று வேதமூர்த்தி இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.