கொழும்பு, ஏப்ரல் 1 – இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நேற்று பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். தனது பதவி காலத்தில் எரிபொருள் உடன்படிக்கையின் போது ஊழலில் ஈடுபட்டு அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி ஜெயசுந்தர மீது இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதே போல் நேற்று முன் தினம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் அசந்தா டி மெல்லும் விசாரணை செய்யப்பட்டார். இப்படி பல வகைகளில் தனது ஆதரவாளர்களை திட்டமிட்டு புதிய அரசு பழிவாங்கி வருகிறது என ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.